135
எங்ஙனம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூற அல்ல, இதனை நாம் இங்குத் தீட்டுவது, சைவத்தின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவரை ‘சிவவேடம்’ பூண்டு ஏய்த்து மாய்த்த, அந்தப் பெரிய புராணத்தின் மறு பதிப்பென, இப்போது நமது நாட்களிலே, அரசியல் துறையிலே நடைபெறும், உரிமைப் படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடவே இதனைக் கூறினோம்.
நெற்றியிலே நீறு, எனவே நேர்மையிலே நாட்டமிருக்க வேண்டும். கழுத்திலே சிவச்சின்னம், ஆகவே அதை அணிந்திருப்பவரின் உள்ளம் தூய்மையானதாக இருந்தே தீர வேண்டும். கட்கத்திலே ஏதோ இருக்கிறது, சிவகோலத்தவரிடம், சிவாகம ஏடுதான் இருக்கும்–என்ற முடிவுக்கு, பக்தியின் காரணமாக வந்து உயிரை இழந்த மன்னன்போல, வேடத்தைக்கண்டு ஏமாந்து, உரிமையை இழந்துவிடும் பரிதாபத்துக்குரிய மக்கள் அரசியல் துறையிலே அநேகர் உள்ளனர்.
மெய்ப்பொருள் உரைக்க வந்துள்ளார் என்று எண்ணி வேந்தன் உயிரிழந்ததுபோலவே அரசியலில், வேடத்தைக் கண்டு மயங்கி, அந்த வேடதாரிகள், நற்பொருள்தர வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கைக் கொண்டு, பிறகு தமது உரிமையை நாசம் செய்து கொள்ளும் மக்கள், இதுபோது உள்ளனர்.
யாருக்கும், ஏதேனும் ஓர் பொருளின் மீது பற்று மிகுதியாக இருப்பின், அவர்களை, எத்தர்கள் ஏய்க்க எண்ணும் போது, எதன் மீது அவர்களுக்குப் பிரியம் அதிகமோ, அதே போல் கோலம் பூண்டு வந்தே, ஏய்ப்பர்–ஏய்த்திருக்கின்றனர்– ஏமாளிகள் உள்ளவரையில் இத்தகைய எத்தர்கள் இருக்கத்தான் செய்வர். பற்று இருக்கத்தான் வேண்டும் ஏதேனும் ஓர் கொள்கையினிடம்–மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு–ஆயினும் பற்று, நமக்குப் பகுத்தறிவையும் பாழாக்கும் மூடுபனியாகும்படியாக மாறிவிட, அனுமதிக்கலாகாது.
இந்த மூடுபனியை ஒட்டித்தான் தம்பி! நாம் அறிவொளியைத் தந்திட வேண்டும்.
நெற்றியிலே உள்ள நீறு சரி; கழுத்திலே உருத்திராட்ச மாலை, சரி; மகிழ்ச்சி, மதித்திடுவோம்; ஆனால் கட்கத்தில் மூட்டையில் உள்ளது என்ன? என்று மட்டும் மன்னன்