137
காமராஜர், வேண்டுமென்றே கபட நாடகமாடி ஏழை எளியோர்களை ஏய்க்கிறார் என்று நான் கூறவில்லை, தம்பி! எத்தனை அரசியல் கருத்து வேற்றுமை இருந்திடினும், அவர்மீது பழி சுமத்திடும் அவுைக்குத் தாழ்ந்து போகவும், தரக்குறைவு கொள்ளவும் நான் தயாராக இல்லை.
அவர் நரியைப் பரியாக்கிக் காட்ட முயலுகிறார்; முதலாளிகளை சோஷியலிஸ்டுகள் ஆக்கிக் காட்டுகிறார்.
தென்பாண்டி மண்டலத்துக் காமராஜருக்கு நரி பரியான கதை தெரிந்திருக்க வேண்டும்!
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகச் செலவிட்டு மன்னனின் சீற்றத்துக்கு ஆளாகி மருண்டு கிடந்த ‘பக்தனை’க் காத்திட, நரி பரியாகும் திருவிளையாடலை நடாத்திக் காட்டினார் என்பர் புராணம் படிப்போர்.
குதிரை வாணிபனாக வடிவம் கொண்டு, காட்டினில் கிடந்த நரிகளைப் பரிகளாக்கி, மன்னனிடம் தந்து, அவன் மகிழ்ச்சிகொண்டு, அந்தக் குதிரைகளைக் கொட்டிலில் கட்டி வைத்திட, இரவு பரியாக மாறிக்கிடந்த நரிகள் பழையபடி நரிகளாகி, ஊளையிட்டுப் பாய்ந்து, ஏற்கனவே ஆங்கு இருந்த பரிகளைக் கடித்துக் குதறிவிட்டுக் காடுநோக்கி ஓடிவிட்டன என்பர்.
கண்ணுதற் பெருங்கடவுளாலேயே, நரியைப் பரிபோல் வடிவம் கொண்டிட மட்டுமே செய்திட முடிந்தது.
நரிகள் பரிகளாகிவிடவில்லை, நாதன் நடத்திய திருவிளையாடலின் போதேகூட!
ஆனால் காமராஜர், கனதனவான்களை, கள்ளச் சந்தையினரை, கொள்ளை இலாபமடித்திடுவோரை, சோஷியலிஸ்டுகள் ஆக்கிடமுடியும் என்கிறார்; நம்பச் சொல்கிறார்!!
ஆண்டவனே முயன்றாலும் நரி, பரியாகிவிடாது என்பதனைத் திருவிளையாடல் பற்றிய திருக்காதையே காட்டுகிறது–காமராஜரின் திருவிளையாடலிலா நம்பிக்கை கொள்ள முடியும்?