இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காஞ்சிக் கடிதம்: 85
எல்லாம் தருமத்துக்கு!
- ★ ‘எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன்’—சீமான்.
- ★ ‘பாங்குகளைச் சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகிறோம்.’—காங்கிரஸ்
- ★ ஏழைகளின் ஓட்டும் வேண்டும்! முதலாளிகளின் நோட்டும் வேண்டும்!
- ★ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்
- ★ பாங்குக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெடிகுண்டு அல்ல! வெறும் புஷ்வாணம்!
தம்பி!
எங்கோ படித்ததாக நினைவு; நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான்; என்றாலும் நான் கூற நினைக்கும் பிரச்சினைக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதால் அதனைச் சொல்லுகிறேன்.
ஒரு சீமான்; பிள்ளை குட்டிகள் இல்லை; பெரிய சொத்து! இவ்வளவு சொத்தும் யாருக்குப் போய்ச்சேரப் போகிறதோ, யார் அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறார்களோ என்று ஊரார் பேசிக்கொண்டனர்.