உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கிளர்ச்சி என்றாலே அது வெறும் ஆலைத் தொழிலாளி செய்வது, நமக்கு அது ஒத்து வராது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இன்று தத்தமது அமைப்புகள் மூலம், கிளர்ச்சி நடத்திடக் காண்கிறோமே.

சர்க்கார் அலுவலகப் பணியாளர்கள் சீறி எழுவதைக் காண்கிறோம்.

பாங்குகளில் ஊதியம் பெறுவோர் கிளர்ந்தெழுவதைப் பார்க்கிறோம்.

ஆறாத் துயரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் ‘ஆர்ப்பாட்ட அணிவகுப்பு’ நடத்திடக் காண்கிறோம்.

யார் இந்த ஆட்சியிலே திருப்தியுடன் இருந்திட முடிகிறது!

நாடே எமது பக்கம்! என்று நாப்பறை ஒலித்துக் காட்டுகிறார்கள், ஆளவந்தார்கள்.

இல்லை! இல்லை! — என்ற முழக்கம் எழுப்புகின்றனர், ஒவ்வொரு கிளர்ச்சியின்போதும்.

துப்பாக்கி பேசுகிறது! பிணம் விழுகிறது! பீதிகொண்டு மக்கள் ஓடிடக்கூட மறுக்கிறார்கள்.

வீரன் வீழ்ந்தான்! வீரம் வீழ்ந்துபடாது! ஒருவன் மாண்டான்! மற்றவர் மாண்டிடாதிருக்குமட்டும் அறப்போர் நடந்திடும்!!—என்றல்லவா முழக்கம் எழுப்புகிறார்கள்.

போலீஸ் போதவில்லை! இராணுவம் வரவழைக்கப்படுகிறது! ஏன்? கொந்தளிப்பு அடங்க மறுக்கிறது.

சாகவேண்டி நேரிட்டுவிடுமோ என்ற பயம்கூட இன்று மக்களிடம் வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது: குறைந்து கொண்டும் வருகிறது.

பலர் வாழச் சிலர் சாகலாம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட தத்துவமாகிவிட்டது.