உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

ளுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே, நாங்கள், காங்கிரஸ் அரசு தீட்டிய சூழ்ச்சிக்குப் பலியாகக் கூடாது என்று முடிவெடுத்தோம்” என்றேன் நான்.

“நல்ல முடிவு! உதயசூரியன் நாடாளும் வாய்ப்புப் பெற வழி கிடைத்திருக்கிறது.” என்றார் அறிவானந்தர்.

“உங்கள் பேராதரவும் நல்வாழ்த்துக்களும் வேண்டும் ஐயா!” என்றேன்.

“தாராளமாக! ஏராளமாக!” என்று அறிவானந்தர் கூறினார் மலர்ந்த முகத்துடன்.

யார் அந்த அறிவானந்தர்! ஆறேழு ஆண்டுகள் அரித்துவாரத்தில் ஆசிரமம் நடத்திய மகானா? அல்லது கேட்டதும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக அள்ளிக் கொடுத்திடும் சீமானா? என்று கேட்கிறாயா, தம்பி!

அறிவானந்தர், உழைத்து உருக்குலைந்த நிலையில் உள்ள ஒரு எளியவர்! கவலைக்கோடுகள் படிந்துள்ள முகம்! கள்ளங்கபடமற்ற மனம்!! தான் படுகிற அல்லலையும் தொல்லையையும், தன் பிள்ளைகளாவது படாமல், நிம்மதியான வாழ்வு பெற வேண்டுமே என்ற ஏக்கம். தன்னைப் போன்றவர்கள் கொண்டுள்ள ஏக்கத்தைப் போக்கிடத்தக்க ஒரு நல்லாட்சி அமையவேண்டுமே என்ற எண்ணம் கொண்டவர். அமையும் என்ற நம்பிக்கை கொண்டவர்!

மிட்டாமிராசு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அலையும் திருக்கூட்டத்தினர் அல்ல! உழைப்பின் பலனைப் பெறவேண்டும் என்று எண்ணிடும் தூயவர்.

அவர் பர்மிட்டும் லைசென்சும் கேட்கவில்லை; பாலும் தேனும் ஓடிட வேண்டும், அள்ளி அள்ளிப் பருகிட வேண்டும் என்ற பேராசை கொண்டவர் அல்ல!

செய்திட ஒரு வேலை! அதிலே ஒரு நீதி, ஒரு நிம்மதி! குடியிருக்க ஒரு இடம்! வயிறாரச் சோறு! மானங்காத்திட ஆடை! நோயற்ற வாழ்வு! ஓய்வு நேரம், உள்ளத்துக்குக் குளிர்ச்சி தர!—இவைகளைத்தான் எதிர்பார்க்கிறார்.