உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்குப் பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழி மேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுப் பரபரப்புணர்ச்சியுடன் அவற்றைப் பிரித்துப் படிக்கிறோம், பலதரப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்துகொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும். அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித்திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் ‘தம்பிக்குக் கடிதம்’ என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே, விரைவில ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக!

அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு இலக்கியவிருந்து படைக்க முன்வந்த ‘பாரி நிலைய’த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன் பெற்று, இனிதுற வாழ்வார்களாக!

4-1-63 —இரா. நெடுஞ்செழியன்