உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

இது மக்களின் கசப்புணர்ச்சியை, கொதிப்புணர்ச்சியை அதிகமாக்கித்தானே இருக்கும்?

இருந்தும், இம்முறை எதிர்க் கட்சிக்கு மரண அடி கொடுப்பேன் என்று பேசும் அளவுக்குத் துணிவு எப்படி வந்தது துரைத்தனம் நடத்தும் கட்சியினருக்கு?

தம்பி! நாம் மட்டும் அல்ல, உண்மையான ஜனநாயகவாதிகள் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ஒரு கட்சியை மக்கள் வெறுத்து ஒதுக்குவதற்கு என்னென்ன கொடுமைகளை அந்தக் கட்சி நடத்திடும் ஆட்சி செய்திட வேண்டுமோ அவ்வளவும் செய்தான பிறகு, அந்தக் கட்சித் தலைவர், எதிர்க்கட்சிக்கு மரண அடி கொடுப்பேன் என்று பேசும் துணிவு, எதைக் கொண்டு பெற முடிகிறது?

பணம், தம்பி! பணம்! மூட்டை மூட்டையாகச் சேர்த்து வைத்துள்ள பணம்!

பணம் பாதாளம்வரை பாயும் என்பதிலே உள்ள நம்பிக்கை.

வாய்க் கசப்பைப் போக்க, நாக்கிலே தேன் தடவுவதுபோல, கசப்புணர்ச்சி கொண்டுள்ள மக்களுக்கு, பணத்தாசை காட்டி, மயக்கிடலாம் என்ற நம்பிக்கை.

ஏழ்மையும் அறியாமையும் கப்பிக் கொண்டிருக்கும் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை மீண்டும் வலைவீசிப் பிடித்துவிடலாம் என்ற நைப்பாசை.

இதனை மறுத்திட நினைத்திடும் மகானுபாவர்கள்,1962 -ம் ஆண்டிலே இருந்த கசப்புணர்ச்சி போய்விட, இந்த ஐந்து ஆண்டுகளிலே காங்கிரசாட்சி எடுத்துக் கொண்ட முயற்சிகளிலே எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை விளக்கிடக் கேட்டதுண்டா?

விளக்கமாவது அவர்களாவது தருவதாவது! ஒரே வீராவேசம் அல்லவா பொங்கி வழிகிறது! பெரியவரே