உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

சென்ற பொதுத் தேர்தலின்போதும் இது போன்ற ‘படம்’ காட்டினார்கள்! முறை, பழையதுதான்! பலனும் முன்பு போலத்தான் இருக்கும். ஆனால், இம்முறை, நம்மைத் தாக்குவதில் சற்று வேகம்—காரம்—சூடு—அதிகம் இருக்கும். அதாவது நம்மைத் தாக்குவதற்காக அவர்கள் தமது படைக்கலன்களை மேலும் கூர்மையுள்ள தாக்கிக் கொள்ளவேண்டி வருகிறது!! இந்நிலை, படைக்கலன்களுக்கு அல்ல, நமக்குக் கிடைத்துள்ள ‘தாங்கும் சக்தி’க்குத் தான் பெருமை தருவதாகும்.

அண்ணா! அவர்கள் படம் எடுக்கப் போகிறார்களாமே, நாம்?— என்று ஆவலோடு கேட்டார் ஒரு தம்பி!

நமக்கும் சேர்த்துத்தானே அந்தப் படங்கள்? என்றேன் நான்.

என்ன அண்ணா! புதிர் போடுகிறீர்கள்—என்று கவலை ததும்பக் கேட்டார், தம்பி.

தம்பி! படம் பார்த்தவர்கள், பகலில், கடைவீதி போவார்கள் அல்லவா? விலை ஏற்றம் கொட்டுமல்லவா? அப்போது அவர்கள் என்ன எண்ணிக் கொள்வார்கள்? படம் காட்டினார்கள் படம்! பாலும் தேனும் ஓடுகிறது! நாங்கள் சாதிக்க வேண்டியவைகளைச் சாதித்துவிட்டோம் என்று பாடிக் காட்டினார்கள். இங்கேயோ...!—என்று பேசி பெருமூச்சு விடுவார்கள் அல்லவா?— என்றேன். ஆமாம் என்றார் தம்பி. அந்தப் பெருமூச்சு, காங்கிரசுக்கு ஓட்டா வாங்கித் தரும்? என்று கேட்டேன். தம்பி புன்னகை புரிந்தார். அதனால்தான் தம்பி! நான் கூறினேன், படம் நமக்கும் சேர்த்துத்தான் என்று—சரிதானே?

தம்பி! ஒரு கட்சி, ஆட்சியை நடத்திய நிலையில், தன் சாதனைகளை எடுத்துச் சொல்ல முனைவது ஒன்றே மக்கள் அந்தச் சாதனைகளைச் சாதனைகள் என்று ஒப்புக் கொள்ளவில்லை அல்லது உணரவில்லை என்பதற்குச் சான்றுதானே?

போகட்டும்; தம்பி! காங்கிரசின் சாதனைகளைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல, காங்கிரசாட்சியிலே நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளைப் படம் பிடித்துக் காட்டினால், ‘கத்தரிக்கோல்’ சும்மா இருக்குமா?