76
என் தாயாரோ மனைவியோ ஒரு பிழையும் செய்யாதபோதும் எனக்குக் கோபம் வருகிறது.
இது யாருடைய குற்றம் அரசே!”இப்படி ஒரு கேள்வியைப் புலவர் கேட்டபோது, மன்னன் திகைத்துப்போயிருப்பான் என்றுதானே எண்ணிக் கொள்வாய்,
ஐயம் அகற்றுக! என்று புவியாளும் மன்னன் புலவரிடம் கேட்பது இயல்பு. இஃதோ அஃதன்று, புலவர் கேட்கிறார் விடை தரும்படி, மன்னனை நோக்கி.
நிதி மட்டும் படைத்தவனாக இல்லை அம்மன்னன்; நிரம்ப மதி படைத்தவன். கேள்விக்கான விடை புரிந்து விட்டது. பணியாளை அழைத்து, புலவருக்குத் தேவைப் படும் பணம் கொடுத்தனுப்பக் கட்டளையிட்டான்.
மன்னனுடைய மதிநுட்பத்தைக் கண்ட புலவர் பெரிதும் பாராட்டினார்.
காரணமற்ற கோபம் ஒவ்வொருவருக்கும்! ஒருவர்மீது ஒருவருக்கு — புலவர் அந்த நிலையைத்தான் எடுத்துரைத்தார்.
வறுமை நோய் வாட்டும்போது மட்டுமே இந்த நிலைமை இருக்க முடியும். கோபம்—ஒருவர்மீது ஒருவருக்கு. தன் குடும்பத்தை வறுமை வாட்டி வதைக்கிறது என்பதைத் தான் புலவர் எடுத்துரைத்தார் என்பதனை உணர்ந்து கொண்ட மன்னன், பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையை நீக்குவதன் மூலம் அவர் குடும்பத்தில் குதூகலம் மலர்ந்திடச் செய்தான்.
போஜராஜனுடைய அறிவுத் தெளிவையும், அவர் புலவர்களை ஆதரித்த பண்பினையும் விளக்கிட இந்தக் கதையினைக் கூறுவர். ஆனால் தம்பி! நான் இதனை எடுத்துக்காட்டுவது அதற்காக அல்ல; வறுமை என்னென்ன செய்துவிடும், எவரெவருக்குக் கோபம் எழ வைத்துவிடும் என்பதை விளக்க.
புலவர், கற்றறிவாளர்; காரணமற்றுக் கோபம் கொள்ளக் கூடாது என்பதனை நன்கு அறிவார். ஆயினும் புலவரே சொல்லுகிறார், ஒரு குற்றமும் செய்யாத என் மீது என் தாயாருக்கும் மனைவிக்கும் கோபம் வருகிறது.