உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

கைகோர்த்துக் கொண்டு, நம் எதிரே வந்து நிற்கிறார்கள்—தனி நாடா!! ஆகாது! ஆகாது! கூடாது! கூடாது!! பாரத்மாதாகீ ஜே!! என்று கோஷமிடுகிறார்கள்.

தமிழ்நாடு—அளவில் சிறியது என்று ஆச்சாரியார் கூறும்போது, கம்யூனிஸ்டுகள், அளவுபற்றி என்ன கவலை, அதற்காக அச்சம் கொள்வானேன் என்று பேசுகிறார்கள்!

தமிழ்நாடு கூட அல்ல, தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கருநாடகம்—இந்த நான்கும் மொழிவழி அரசுகளாக இருக்கும் நிலையில், ஓர் கூட்டாட்சி அமைத்துக்கொண்டு, பாரதப் பிணைப்பை நீக்கிக்கொண்டால் என்னய்யா, என்று நாம் கேட்கும் போதோ, ஆச்சாரியாரும், அவரை நோக்கி அஞ்சாதீர் என்று கூறிய கம்யூனிஸ்டும் கூடிக்கொண்டுவந்து நம்மைக் குட்டியபடி, ஏடா! மூடா! சிறுசிறு நாடுகளாகப் பிரித்தால் சீரழிவுதானே ஏற்படும், என்று குடைகிறார்கள்.

தம்பி! இவர்தம் போக்கை என்னென்பது!

ஆச்சாரியார் கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிக்கொள்ள அவர் காட்டும் பரிகாரம், தட்சிணப்பிரதேசம். அது கலவை! தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் எனும் மொழிவழி அரசுகள் கூடாது, கிடையாது—இவையாவும் ஓரே கொப்பரையில் போட்டுக் கொதிக்க வைத்துக் குழம்பாக்கி, ஒரு வார்ப்படமாக்க வேண்டுமாம்—தட்சிணப்பிரதேசமென்று—இதை வார்த்தெடுத்து, டில்லியிடம் காட்டி ‘முத்திரை’ பொறித்துக்கொள்ள வேண்டுமாம்—இது ஆச்சாரியாரின் அவியல்!!

கம்யூனிஸ்டு திட்டம் மொழிவழி அரசு இருக்கும்; ஆனால் அது டில்லி காட்டும் வழி நடக்கும் என்பதாகும்.

நாம் கூறுவது, மொழிவழி அரசு அமையட்டும்; பிறகு, ஓர் திராவிடக் கூட்டாட்சி அமைத்துக்கொண்டு, டில்லியின் பிடியிலிருந்து விலகுவோம் என்பது!

கூட்டாட்சிக்கு, ‘திராவிட’ என்ற அடைமொழி கொடுப்பதற்குக் காரணம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கருநாடகம் ஆகிய நான்கும் திராவிட மொழிகள் என்பதாலும் திராவிட இனத்தவர் இந்த நால்வர் என்பதாலும் ஆகும்.

தட்சிணப்பிரதேசம் என்ற நாமகரணத்தைக் காட்டிலும், திராவிடநாடு—திராவிடக் கூட்டாட்சி என்று பெயரிடுவது, வரலாறு, இலக்கியம், கல்வெட்டு, மொழிநூல்

அ.க. 4 — 9