உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம்: 73

மூவர் முரசு

இத்தாலி நாட்டில் ஒரு கொடிய
நிகழ்ச்சி—அமைச்சர்
பதவியும் சுப்ரமணியமும்—
வடக்கும் தெற்கும்—ஆச்சாரியார்.

தம்பி!

படித்து முடித்ததும், அந்தப் பாவை என் மனக்கண்முன் தோன்றிடவே “வீர வணக்கம், வனிதாமணியே! உலகிலே மாண்பும் அறமும் அடியோடு அழிந்து படாமலிருப்பது, உன்போன்ற ஆரணங்குகள் ஒரு சிலர் அவ்வப்போது ஆற்றலுடன் பணிபுரிவதனாலேதான்! தாய்க்குலத்தின் தனிப் புகழைத் தரணிக்கு விளக்கிய ஒளிவிளக்கே! உன் தாள் பணிகிறேன்! தையல் என்போர் மையல் ஊட்டும் மைவிழியும், களிப்பூட்டும் கொவ்வைக் கனிவாயும், தாலாட்டும் திருக்கரமும் மட்டுமே கொண்டவர்கள்; அவர்கள் மெல்லியலார், சுடு சொல் கூறிடக் கேட்டாலே அவர்தம் அகம் அல்லற்படும், முகம் போலிவிழந்து விடும்; அனிச்சப்பூ போன்றார் அரிவையர், என்று மட்டுமே பேசுவர். ஆனால் பிறர் திகைத்துப் போயிருக்கும் நேரத்தில், அம்மையே! நீ காட்டிய அஞ்சா நெஞ்சு, அவனிக்கே ஓர் அணி எனலாம்!! வாழ்க உன் திருப்பெயர்! வளர்க மகளிர் மாண்பு” என்றெல்லாம், கூறிக் கூறி வியந்து பாராட்டினேன், ஆமாம்,