உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

இங்கு இருந்தும், பசி! பசி! என்று பதறிக் கதறி, வேலை கிடைக்காததால் வேற்றுச் சீமைகள் சென்று சோற்றுக்கு அலைகிறார்கள், நேற்றுவரையில் நானிலம் போற்றிடத்தக்க நல்லாட்சியில் இருந்தவர்கள்.

கத்துங் கடலில் முத்து எடுத்து கடலகமெனத் தகும் கலம்தனில் ஏறிச்சென்று, காற்றை அடக்கி, யவனம் சென்று வாணிபம் நடத்தி, பொன்னும் புகழும் ஈட்டினர் முன்னோர்.

நாமும் தமிழரே! நாமமதில் தமிழர் என்றாரே, பாரதியார், அந்தத் தமிழர்! நாம், நமது உடன்பிறந்தாரை, மலாய்க் காட்டுக்குத் துரத்திவிட்டிருக்கிறோம்! பர்மாவில் ரப்பர் பால் எடுக்கிறார்கள்—தாயகத்தின் கோலத்தை எண்ணி அழுகின்றனர்! இங்குள்ள ஏழை எளியவர்களோ இல்லாமை கொட்டும்போது, ‘அக்கரை’ சென்றாலாவது அரை வயிறு கஞ்சி நிச்சயமாகுமே, போகலாமா, என்று எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர்.

கட்டழகி, கன்னிப் பருவத்தினள் கலகலெனச் சிரித்தபடி, மணமிகு சந்தனம் குழைத்துப் பூசி, மகிழ்தல் போல பொன்னி எனும் பேரழகி பூரிப்பை அள்ளித் தெளிக்கிறாள். காவேரி தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம், தங்கம்! என்று கவி சுரக்கிறது, அவள் எழிலை எண்ணும்போதே.

செந்நெலைக் கண்டு செங்கமலம் சிரிக்கிறாள்—அன்னம் அதுகண்டு நின்ற நிலையிலன்றோ நீ இருப்பாய், என்போல் குடைந்தாடி மகிழவல்லாயோ என்று கேட்டு, கவர்ச்சியூட்டக் காண்கிறோம்.

கன்னல் விளைகிறது, காரமிக்க மிளகுக் கொடிகள் படருகின்றன!

உலகின் தொழில்துறை பலவற்றுக்கும் தேவையான ரப்பர் விளையும் காடுகள்—மனைக்கும் மரக்கலத்துக்கும் தேவையான தேக்கு—ஓங்கி வளரும் தெங்கும், ஒயிலாகக் காட்சி தரும் கமுகும், என்னென்ன எழில், எத்துணை வளம், எல்லாம் நந்தம் இன்பத் தமிழகத்தில்!

முல்லை மணமும், காட்டிலே விளைந்துள்ள சந்தன மரத்திலே உடலைக் களிறு தேய்ப்பதினாலே எழும் நறுமணமும், தென்றலிற் கூடிக் கலந்து வந்து, தமிழகத்துக்கு என்றோர் தனிமணமல்லவா தருவதாக உளது.