173
புத்தி புகட்டுகின்றனர் என்றால், வெட்கப்படுபவர், வேதனைப்படுவர், திருத்திக்கொள்ள முற்படுவர் என்று இலக்கியங்களிலே காணுகிறோம்.
இன்றைய ஆட்சியினரோ, மக்களைப் பார்த்து, “பாமரர் நீவிர்! உமக்கு இதெல்லாம் என்ன தெரியும்!” என்று கூறியும், புலவர்களைப் பார்த்து, “ஏடு தூக்கிடும், உமக்கு ஏனய்யா இந்த வீண் வேலை” என்று ஏளனம் செய்தும், இறுமாந்து கிடக்கின்றனர்.
அதிலும், தமிழாசிரியர்கள்—அதிலும் குறிப்பாகத் தமிழ் இனத்துக்கென்று ஓர் தனி வாழ்வு அமைதல்வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்—ஆரியம் இது, தமிழ் நெறி இது என்று பிரித்துக் காட்டிடும் போக்கினர் என்றால், பெருங்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது.
அவர்களை, ‘நாத்திகர்’ என்று நிந்திக்கவும், ஆட்சியாளர்கள் துடித்தெழுகின்றனர்.
எனவே, டாக்டர். மு.வ.வின் இந்தக் கருத்துரை கேட்டு ஆட்சியாளர் திருந்த முற்படுவர் என்றுநான் எண்ணவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை—அவருக்கும் அந்த நம்பிக்கை எழுமா என்பது ஐயப்பாடுதான்! நேரடியாக அரசியல் துறையிலே ஈடுபாடு கொள்ளாதவரும், இன்றைய அரசியலில் நெளியும் நிலைமையைக் கண்டு மனம் பொறாது பேசவேண்டி வந்ததே என்பதை நாடு காண்கிறது! அதன் பயன் மிகுதியும் உண்டு என்பது என் எண்ணம்.
அரசியல் துறைக்குத் தம்மை ஒப்படைக்காமல், பேதம் பிளவு என்பவை தீது, ஒற்றுமை சமரசம் என்பன நற்பண்புகள் என்பதை வலியுறுத்தத் தவறாமலிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, டில்லியிடம் சிக்கிக்கொண்டு, நமது அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டு கிடக்கும் நிலை கண்டு மனம் வெதும்புகின்றனர்.
பலருக்கு, பாரதம் ஒரே நாடு, இதனைத் தனித்தனி நாடுகளாக்கிவிட்டால் ஒற்றுமை குலைந்துபோகும் என்று டில்லிப் பெரியவர்கள் பேசுமபோது, ஆம் என்று தான் கூறத்தோன்றுகிறது. அதிலும் தமிழாசிரியர்கள், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நெறியினைப் பாராட்டுபவரல்லவா! எனவே, பாரதநாடு ஒரே ஆட்சியின் கீழ் இருத்தல் முறை என்று கூறப்படும்போது அவர்கள் இசைவு அளிப்பது மட்டுமல்ல, எம்மனோர் உலகு முழுவதையுமே ஒரே நாடு என்று எண்ணிச் சொந்தம் கொண்டாடிய பெருநோக்கினர்! இமயத்துடன்