உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

இது வணிகர்களின் பிரச்சினை, நமக்கு உரியதல்ல என்று ஒதுங்கி நிற்பர். எனவே கூட்டு எண்ணம், ஏற்பட வழி கிடைப்பதில்லை. தம்பி! நாம், எந்தத் துறையுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட பிரச்சினையாக இருப்பினும், அந்தப் பிரச்சினை, ‘டில்லி—சென்னை தொடர்பினை’ எடுத்துக்காட்டுவதாக அமைந்தால், அந்தப் பிரச்சினையை நமக்கு உரிய பிரச்சினை—நாட்டு மக்கள் கவனிக்கவேண்டிய பிரச்சினை என்றுதான் கொள்கிறோம். இது தமிழாசிரியர் கவனிக்க வேண்டிய பிரச்சினை, இது துரைத்தன ஊழியருக்கு மட்டுமே உரிய பிரச்சினை, இது பாட்டாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று எந்தப் பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை. காரணம், நமக்கு எந்தப் பிரச்சினையும், அந்த ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறதே, தனி அரசுகளை விழுங்கிக் கொழுத்துப் பேரரசு ஒன்று உருவெடுக்கும் பிரச்சினை, அதனுடைய பல கூறுகளிலே ஒன்றாகவே படுகிறது.

கைகால் பிடிப்புக்காரன், தைலம் தடவியும், வலியுள்ள இடத்தை நீவியும் நலன் பெற முயல்வது இயல்பு என்றாலும், வலிக்கு உள்ள காரணம் களைந்திடுவதற்கான மருத்துவம் பார்த்துக் கொண்டாக வேண்டுமல்லவா! நாம் அந்த நல்ல மருந்து தேடுகிறோம். அதுபோது, ஐயோ முதுகு எலும்பு வலிக்கிறதே! கண் எரிச்சல் தருகிறதே! கைகால் பிடிப்பு ஏற்பட்டுவிட்டதே! குமட்டலெடுக்கிறது, குடைச்சலுமிருக்கிறது! என்று அவரவர் தத்தமக்குவந்து தாக்கும் வலிபற்றி வாய்விட்டுக் கூறிடக் கேட்கிறோம்—கேட்கும்போது நமக்கு, இவையாவும், தனித்தனி நோய்களல்ல, வெறும் குறிகள், என்று புலப்படுகிறது.

கலை, மொழி, எல்லை எனப்படும் துறைகளிலே மட்டுமே தமிழருக்கு மிரட்டல்—விரட்டல் டில்லியிடமிருந்து கிடைக்கிறது, மற்ற மற்ற துறைகளிலே அரவணைப்பு கிடைக்கிறதா! எல்லாத் துறைகளிலும், ஏன்! என்ற குரல் கேட்கும் போதெல்லாம், மிரட்டல்—விரட்டல்!!

தம்பி! டில்லியில், சென்ற திங்கள், இந்தியப் பேரரசு பல்கலைக்கழக இளைஞர் விழா நடத்திற்று. இதில் 31 பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டன. 1600 மாணவர்கள் சென்றனர். நேருபண்டிதர் இதில் கலந்துகொண்டு சிறப்பளித்தார்.

சென்னைப் பல்கலைக் கழகம் மட்டும் இந்த விழாவிற்குப் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கவில்லை.