உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

கூறினால், பாஞ்சாலத்தில் உள்ளவர்கள் மனதிலே சொந்தம் எழாதே! வியப்பு தோன்றக்கூடும்! சுவை மிக்க வீரக்கதை கேட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கக் கூடும்! எனக்குத் தம்பி! சாதாரணமாக நெல் காணும்போது ஏற்படும் நம் பொருள் என்ற உணர்ச்சி கோதுமையைக் காணும்போது ஏற்படமாட்டேனென்கிறதே, என்ன செய்வேன்!

நம் நாடு—நம் இனம்—நம் நாட்டு இயல்பு—நமது வரலாறு—நம் நாட்டு வீரக் காதைகள்—நம்நாட்டு எழில்—நம்நாட்டு முறைகள்—என்பன, தம்பி! தாயிடம் சேய்கொள்ளும் பாசம் போன்றது, இயற்கையாகச் சுரப்பது, இந்தப் பாசம், பெற, தம்பி! எத்தனை எத்தனை தலைமுறைகளாயின என்று எண்ணிப்பார்! காவிரி குறித்தும், தமிழகத்து வீரக்காதைகள் குறித்தும், இந்நாட்டுக் குன்று குறித்தும் நம்மவர் கொண்டிடும் கொள்கை குறித்தும், எத்தனை எத்தனை தலைமுறைகளாகப் பேசிப் பேசிப் பேசி; அந்தப் பாசம் நிலைத்து நிற்கிறது!

சேரன் செங்குட்டுவன் காலமுதற்கொண்டு சொல்லிச் சொல்லிச் சுவை ஊறி ஊறி, நமக்கென்று ஓர் சுபாவம் அமைந்துவிட்டது—அதனை சுப்பிரமணியனார் பார்த்து சூ! மந்திரக் காளி! ஓடிப்போ! என்று சொல்லுவாராம் அந்த ‘பாசம்’ ஓடியே போகுமாமே! இந்தக் கேலிக்கூத்தை என்னவென்று சொல்வது!

நம் நடிகமணி டி. வி. நாராயணசாமி, 108-நாட்கள் சிவசீலா நாடகத்தில் சிவபெருமான் வேஷம் போட்டார்—பித்தளைப் பாம்புகள், கிரீடம்—ஏகப்பட்ட ‘பாரம்’— அந்தப் பழக்கத்தில், காலைவேளைகளிலேயே கூட, அந்த நாடகம் முடிந்து பல நாட்களுக்குப் பிறகும் நண்பர் நாராயணசாமி என்னிடம்வந்து பேசிக்கொண்டிருக்கையில், ‘பாரம்’ சுமந்து கொண்டிருக்கும் தோற்றமே இலேசாகத் தென்படும்! தம்பி, தாய்நாட்டுப் பாசம், நாராயணசாமி சுமந்தது போன்ற பாரம் அல்ல—அதுதான் தேசியம்—பாரம்பரியம் என்கிறார்களே அது. அதனை விலங்குகளும் அடியோடு இழந்துவிட முடியுமா என்பது ஐயப்பாடுதான்—நாம் எங்ஙனம் அதனை இழந்துவிட முடியும்—அமைச்சர்கள், அதனை இழந்தால் தானே எமக்கு அமைச்சர் வேலை கிடைக்கிறது என்று வாதாடக் கூடும்—தம்பி! அது அவர்கள் கீழ்நிலை சென்று விட்டதைக் காட்டுவதாகுமே தவிர, நாட்டுப்பற்று எனும் மாண்பு பொருளற்றது என்பதையா காட்டிடும்!