191
எப்படி இந்தத் தொழிற்சாலையைச் சரியான முறையில் நடத்தமுடியும் - செலவுக்கும், போடும் முதலுக்கும், எடுத்துக்கொள்ளும் கஷ்டத்துக்கும் ஏற்ற பலன் கிடைக்காதே, இதற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள் என்று இந்திய சர்க்கார், கேள்வி கேட்கிறது.
தம்பி! எல்லா விவரமும் ஆதாரமும் தேடித்தந்து, புள்ளி விவரக்கணக்குக் காட்டி, திட்டத்தை விளக்கி, திட்டத்துக்கு நிபுணர்கள் ஒப்பம் அளித்ததையும் எடுத்துக்காட்டித்தான், 1953-ல், இந்திய சர்க்காரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது—இந்தப் புதிய தொழிற்சாலை துவக்க.
இப்போது, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, துவக்கவிழா நடத்தி, ஊன்றிய விதை செடியான பிறகு, கல்லி எடுத்து வேர் ஆழச்சென்றிருக்கிறதா என்று பார்க்கச் சொல்வதுபோல, இந்தத் தொழிற்சாலை நடத்துவது இலாபகரமானதாக இருக்குமா என்பதுபற்றி எமக்குப் பலமான சந்தேகம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது, என்ன சொல்கிறீர்கள் என்று டில்லியில் உள்ள சர்க்கார் கேட்கிறது.
மகள் ஆறுமாத கர்ப்பிணியான பிறகு, என் மருகன் குடும்பத்தை வளரச் செய்யக்கூடியவன்தானா என்பதுபற்றிய ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே என் இல்லத்துக்கே அழைத்துச் செல்ல எண்ணிவிட்டேன் என்று கூறுபவர் உண்டா! டில்லி இருக்கிறது! ஆண்டு மூன்று ஆகிறது, அஸ்திவாரம் போட்டு! பல இலட்சங்கள் செலவாயின, துவக்க வேலைகளுக்கு! தொழிற்சாலைக்கான தளம் எழும்பிவிட்டது, பாதைகள் அமைந்துவிட்டன! இவ்வளவுக்கு பிறகு, இந்திய சர்க்காருக்கு, பிள்ளை பிழைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாமே, கேட்டனையோ இந்த வேடிக்கையை!!
துவக்கச் சொல்லேன் புதிய தொழிற்சாலைகளை, என்று பேசும் அமைச்சர்களுக்கு, தம்பி! துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள இந்தத் துயரச்‘சேதி’ தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? என்ன செய்தார்கள்? கேட்டுப்பாரேன், காங்கிரசில் உள்ள நல்லவர்களை.
வெடிகுண்டு வீசுவது போல, இந்திய சர்க்கார் வீசிய கேள்வி இருந்தது எனினும் புதிய தொழிற்சாலை அமைப்பாளர்கள், இந்திய சர்க்காரின் சந்தேகத்தைப் போக்க, புள்ளி விவரங்களை மீண்டும் விளக்கி, 5-டன் உற்பத்தி என்பது, முதல் கட்டத்தில்தான், இரண்டாவது கட்டத்திலேயே நாளொன்றுக்கு பத்து டன் உற்பத்தியாகும், தொழில் கட்டி-