உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

“ஆமாம், எனக்கு வயசு அஞ்சு, நான் விளையாடறேன். ...அடி, ஏண்டி! அந்த ஆகாவழியோட கூடிகிட்டு, கதை பேசறே, போயி களிமண்ணு கொண்டுவா...வரவழிலே, எருக்கம் செடி இருக்கும், பத்து இலையும் கிள்ளிகிட்டுவா...”

“எருக்கம் பால் தடவினா புண்ணாயிடும்னு சொல்லுவாங்களே...”

“கொழந்தைப் புள்ளெக்குக் கூடத் தடவலாம். புண்ணு ஏன் ஆவுது? போடி, இருட்டிவிட்டா, அந்தப் பக்கம், கன்னிம்மா கோயில் சர்ப்பம் உலாத்தும்...”

“ஆமாம் பொண்ணு, பார்த்துப்போ...”

“அது என்ன பண்ணும்? கன்னிம்மா! கன்னிம்மான்னு மூணு தடவை சொன்னா, மாயமா மறைஞ்சிடும்...”

“எதுக்கும் ஜாக்கிரதை வேணும். போயிட்டு சுருக்கா, வாம்மா. என்ன இழவெடுத்த சுளுக்கோ தெரியல்லே, உசிரை வாட்டுது...”

களிமண் தடவி, நோய், நொடியிலே போய்விடும் என்று உபசாரம் பேசி, அவனை அன்றிரவு உறங்கவைக்க, தாயும் மகளும் வெகுபாடு பட்டனர். காலையில் எழுந்ததும், வலி அதிகமாயிற்றே தவிர குறையவில்லை.

‘அப்ப இது, நோய் அல்ல; கன்னியம்மா குத்தம்’ என்று தீர்ப்பளித்துவிட்டு, கோயில் சுற்றக் கிளம்பிவிட்டாள் கோவிந்தம்மா. கந்தப்பன், வேலைக்குப் போகமுடியாதே, என்ன கோபம் செய்துகொள்வார்களோ, வேறு ஆளை வைத்து விடுவார்களோ என்று பயந்தான். ஆனால் என்ன செய்வது, இப்படிப் பயந்து பயந்துதான், வலி இருக்கும்போதே அதைப் பொருட்படுத்தாமல், மூன்று நாட்களாக வேலைக்குச் சென்று, வலியை அதிகமாக்கிக்கொண்டான்.

“ஏன், அந்தச் சோம்பேறி, இன்னைக்கு மட்டம் போட்டுட்டுதா...?”

என்று ஒரு குரலும், அதற்கு ஆதரவாக,

“இப்பத்தான் இதுகளுக்கெல்லாம் திமிர் தலைவிரித்து ஆடுதே”

என்று வேறோர் குரலும் கிளம்புவது, கந்தப்பனுக்குக் கேட்பது போலவே இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை,