106
“இன்னும் இரண்டே மாதம்! பிறகு பாரேன்!” என்று கனிவு வழிந்திடச் சொன்னபோது, அவன் தோள்மீது துவண்டு வீழ்ந்து, “உங்களுக்கு எப்போதும் கேலிதான்!” என்று பேசியபடி, ஒரு பார்வையைச் செலுத்தினாளே, அந்தப் பாவை அல்லவா, தெரிகிறாள்.
அவளோ அயர்ந்து துயிலுகிறாள். ஓடி ஆடி வேலை செய்த அலுப்பு! அலுப்பைக் கவனித்தால், அங்கம் வளர்க்க வேண்டாமா? அதோ தங்கம்! அதற்காக உழைப்பு—உழைப்பினால் களைப்பு; அயர்ந்து தூங்குகிறாள்; கலாபத்தை மடக்கிக்கொண்டு துயிலும் மயிலனையாள்.
அவன், கழனிப்பக்கம்! தவளைச் சத்தம் காதைக் குடைகிறது. பாம்புகள் சீறுவது போன்ற ஒலியும் கேட்கிறது. காற்றினால் அசைந்தாடும் பயிர், கதிர்முற்றிய நிலையில் இருப்பதால், கொஞ்சும் சதங்கை அணிந்தவள் கோலம் காட்டி நடக்கையிலே எழும் ஓசைபோல, இசை எழுப்புகிறது.
ஆயிரம் வேலிக்கு அதிபனாம்! மூன்றடுக்கு மாடிவாழ் மன்னனாம்! இருந்தும் என்ன? தானாகச் சென்று, அவரவரைக் கண்டு, நான்தான் நாலூர் மிட்டாதாரன்! என்று கூறிக் கொள்ளத்தானே வேண்டிவரும் — அவனை உலகறியச் செய்திடவல்ல மகவு இல்லையெனில்.
தொட்டிலிலே படுத்துத் துயிலும் தும்பைக்கு இந்த எண்ணம்போலும். என்னைக் காணுங்கள்—என் எழிலைக் காணுங்கள் — என் தந்தை தெரிகிறாரல்லவா! என் அன்னையும் தெரிகிறாரல்லவா!! உலகம் மெச்சும் அவர்கள் வாழ்வது எவரால்? என்னால்! ஆமாம், சின்னஞ்சிறு சிட்டு, என்று மட்டுமே எண்ணிக்கொள்ளாதீர்கள். நான் எந்தைக்கு ஏற்றம் கிடைத்திடச் செய்யும், செந்தாமரை! தெரிகிறதா? — என்று பேசிடும் பருவமல்ல! முகப்பொலிவு அதுபோன்றே விளங்குகிறது.
உன்னோடு உறவாட எண்ணியே, ஓங்கி வளர்ந்து வருகிறேன்! தொட்டால் மெய் சிலிர்க்கும் — ஆகவேதான், என் கரங்களை நீட்டியபடி நிற்கிறேன்! வா! வா! என்றும் அழைக்கிறேன் — என்று தென்னை, நிலவை நோக்கிப் பேசிட இயலுமா! கீற்றுகள் ஆடுவதும் அசைவதும் அதனைத்தான் காட்டுகின்றன.