116
போலவும், தங்கத்தாலான பல்லக்குதனில் ஏறி, நீ அவளைக் காணச் செல்வது போலவும்கூடக் கனவு காண்பாய்! கனவுதானே!! காலால் வைரத்தை உதைக்கலாம், கண்ணால் ‘கைலாய’த்தைக் காணலாம், விதைக்காமலே அறுத்தெடுக்கலாம், விண்ணிலவு வீட்டு விளக்காகக் காணலாம்!”—என்று கேலி செய்திடக்கூடும்.
அவன் மனமும் உடலும் களைப்பினால் தாக்கப்படாமலிருந்தால், “என்ன? என்ன? சொல்லு? சொல்லு! இன்னொரு முறை சொல்லு! புன்னை மரமா? பெரிய மரமா! நிறையப் பூவா! நமது செல்வி அங்கு சென்றாளா? குடமெடுத்தா? தங்கக் குடமா! அவ்வளவு தூரமா நடந்து சென்றாள்! கால் என்ன வலித்திருக்கும்......” என்று கேட்பான், களிப்புப்பெறுவான், களிப்பூட்டுவான்.
இருவருக்குமே, பிறிதோர் நாள், மனநிலை சரியாக இல்லையெனில்,
கனவுகாண வேண்டியதுதான்! வேறு; என்று சலித்துக் கொள்ளக்கூடும்.
கனவு கண்ட கன்னிபோல, ஒரு இல்லத்துப் பெண் தன்னைச் சிற்றரசன் சிறை எடுத்து, வாயுவேக மனோவேகமான குதிரைமீது அமர்த்திக்கொண்டு, தடுத்திட வந்தவர்களின் தலைகளைக் கொய்துவிட்டுக், கடுகிச் சென்றான் என்று கனவு கண்டு, அப்படிப்பட்ட சிற்றரசன் வரவு நோக்கிக் காத்துக்கிடக்கலாமா? என்று கேட்பார், உளர்.
எனவேதான்! தம்பி! தாய், தன் மகவுபற்றிக் கொண்டிடும் எண்ணம், கனவு வடிவமெடுத்தால், எங்ஙனமிருக்கும் என்பதுபற்றிக் கூறினேன்.
தமது எதிர்காலம், தமது குடும்ப எதிர்காலம், தாம் நடத்தும் தொழிலின் மேம்பாடான எதிர்காலம், இவை பற்றித் தோன்றிடும் ஆசைகள் கனவு வடிவமாகினால், வடிவமாகியதுடன், அது நடைமுறையில் பலித்தும்விட்டால் அதனால் பலன், அந்தக் குடும்பத்துக்கு மட்டுந்தான்.
நாடுபற்றி. சமுதாயத்தைப்பற்றி, நல்லோர்கள் கொள்ளும் எண்ணம், அவர்கள் நாட்டினிடம் சமுதாயத்தினரிடம் கொண்டுள்ள பற்று எத்தகையது என்பதைத்தான் முக்கியமாகக் காட்டிடும்.