உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

களுக்கு முன்பு என் கரத்தில் சிக்கிற்று. கொள்ளை ஆசை எனக்கு, அதனை வளர்க்கவேண்டும் என்று என்னதான் ஆசையுடன் நான் இருப்பினும், அதன் தாயன்பு அதற்கு என்னிடம் கிடைக்குமா? கிடைக்காது! கிடைக்காது! உன்னால் முடியாது! நீ, பழம் தருவாய், பால் ஊற்றித் தருவாய்! வேளையறியாமல். என் விருப்பம் தெரியாமல்! ஆனால், என் தாயின் அரவணைப்பிலே எனக்குக் கிடைக்கும் ‘கதகதப்பு’ இருக்கிறதே, அது அல்லவா, எனக்குப் பேரின்பம் ஊட்டி வளர்க்கிறது! உன்னிடம் ஏது, அந்தக் ‘கதகதப்பு’ அளிக்கும் வல்லமை! நீயோ, மனித இனம்—வேட்டைக்கார ஜாதி! நானோ, பறவை இனம் — உன் பிடியில் சிக்காமல், தயவு நாடாமல், வானத்தில் வட்டமிடும், வானம்பாடி! என்னை விட்டுவிடு! என் இச்சையாக நான் சிறகடித்துப் பறந்திடுவேன்—சிந்துகளும் பாடிடுவேன்! தொலைவிலே இருந்து கேட்டு இன்பம் பெறு—அதற்காக எனக்கொன்றும் தரவேண்டாம்!! தாயன்பு பெறுவதைத் தடுத்திடாதே, விட்டுவிடு!—என்றெல்லாம், பேசுவதுபோலக் குருவிக்குஞ்சு கிறீச்சிடுகிறது—அதனாலேயே அலுத்தும் போகிறது; தன் வலிவற்ற மூக்கினால் என் விரலைக் கொத்துகிறது; வலிதாள மாட்டாமல் துவண்டுபோகிறது!

தம்பி! இந்த நிலையில், வேறு மரம் சென்றிருந்த தாய்ப் பறவை வந்தது; சரேலெனப் பொந்து நுழைந்தது; அடுத்த கணம், கிறீச்சிட்டபடி வெளியே வந்தது, கிளையின் அருகே சுற்றிச் சுற்றி வட்டமிட்டது; இங்கும் அங்கும் தேடுகிறது. பாடும் பறவை! மீண்டும் கூட்டுக்குள் போய்ப் பார்க்கிறது, வெளியே வருகிறது, வேதனையும் கோபமும் கலந்த குரலில் கூவுகிறது.

நாடகம் தீட்டுவோர், சேயினைக் காணாது தவிக்கும் தாய், என்னென்ன விதமாகத் தத்தளிப்பாள், ஏதேது கூறிக் கதறுவாள், என்னென்ன விதமாகக் கூவி அழைப்பாள், எங்கெங்கு தேடிடுவாள். எவரெவரைக் கேட்டிடுவாள், என்பதுபற்றி அழகுறத் தீட்டுவர்—பார்த்திருக்கிறோம்—இந்தப் பாடும் பறவையின் பரதவிப்பினை, எத்துணை திறம் படைத்த நூலாசிரியராலும் அப்படியே சித்தரித்தளிக்க முடியாது. கண்டால் மட்டுமே விளங்கும், கூறக் கேட்கும் போது, மிகைப்படச் சொல்வதாகக்கூடத் தோன்றும்.

தம்பி! எனக்குச் சிறிதளவு அச்சமேகூட ஏற்பட்டு விட்டது போயேன்! அந்தக் குருவி, என் உள்ளங்கையில், தன் இன்பம்,