உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மிகப் பெரும்பாலான மக்கள் எண்ணி மனம் உடைந்துபோன நிலையை உண்டாக்கி வைத்த ஆதிக்க அரசுகள், கடைசியிலே, அடியற்ற நெடும்பனையாயின? சிட்டுகள் வல்லூறை எதிர்த்தன! சீமான்களைப் பராரிகள் விரட்டினர்! மாளிகைகள் மண்மேடுகளாயின! குப்பைமேட்டுக்காரன் கோலேந்தியைக் குப்புறத் தள்ளினான்! தம்பி! இவைகளெல்லாம், எங்ஙனம் நடைபெற்றன? யாரோ சிலர் கண்ட கனவுகள், இவர்களை உணர்ச்சிப் பிழம்புகளாக்கிவிட்டன!

இறுதி வெற்றி கிட்டும் வரையில், நடைபெற போவது குறித்து நாலாறு பேர், கூறி வந்ததைக் கற்பனை என்றும், கவைக்குதவாதது என்றும், காட்டுக் கூச்சலென்றும், பகற்கனவு என்றும்தான், மிகப் பலர் கூறினர்.

அங்ஙனம் கூறிடுவோர், எவரெவர் என்பது குறித்து எண்ணிப் பார், தம்பி! சுவைமிகு உண்மைகள் பல தெரியும்.

அசைக்கவே முடியாது! என்று இறுமாந்து கிடக்கும் ஆதிக்கக்காரன், விடுதலைக்கான முயற்சிகள் உருவாகிக் கொண்டு வருவதாக எவரேனும் கூறினால், கண் சிமிட்டுவான், கரம் அசைப்பான், கேலிச் சிரிப்பொலியுடன் பேசுவான்; மனப்பிராந்தி என்பான்! மமதை மதியை மாய்த்துவிட்ட நிலை அது.

கற்பனைகள்—கனவுகள் என்பவைகள், பலித்திருக்கின்றன என்ற வரலாறு அறியாதவர்கள். விடுதலை உணர்வு எழுப்பிவிடும் கற்பனையைக் கவைக்குதவாத பேச்சு என்று கருதித் துச்சமென்று தள்ளிவிடுவர்.

விடுதலைக்காகப் பாடுபடுவது நெருப்பாற்றில் நீந்திச் செல்வது போன்றதாகும், என்பது தெரிந்து பீதி கொள்வோர், இழப்புகளுக்குத் தயாராக இல்லாதவர்கள், வெல்வெட்டு மெத்தையினர், அல்லது அத்தரத்தினருக்கு வட்டில் ஏந்தி நிற்போர், வெள்ளை வேட்டிகள், அல்லது அதுபோல வெளிச்சம் போட்டுக் கிடப்போர், இவர்களும், விடுதலை உணர்வு எழுப்பிவிடும் கற்பனையைக், கனவு எனறு கதைப்பர்! கோழைத்தனத்தை மறைத்திட, மேதாவித்தனம் என்று எழுத்துப் பொறிக்கப்பட்ட சல்லாத் துணியால், தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு நாட்டிலேயும், விடுதலைக் கிளர்ச்சிக் கட்டத்திலே, இத்தகைய வீணர்கள் இருந்தனர், விடுதலை வீரர்களை