166
தேர்தல் நேரம் நெருங்கி வருகிறதல்லவா, அதனால் இப்படிப்பட்ட, உருட்டல் மிரட்டல் பேர்வழிகள், நரகல்நடை பயின்றவர்கள் ஆகியோருக்கு நிரம்பக் கிராக்கி கிடைக்கும், இப்போதே, அந்த நிலை இங்கும் அங்கும் தெரிகிறது.
உங்க அண்ணாத்துரைக்கு?
என்று கேட்கும் பேச்சாளர்கள், அமைச்சர்களை அருகே வைத்துக்கொண்டே, தூற்றுகிறார்கள்.
குலம் கோத்திரம் தெரியாதா, குணமும் பணமும் தெரியாதா, குட்டுகள் யாவும் வெளிப்பட்டுவிடும். மட்டந் தட்டிவிட்டு மறுவேலை—என்று பேசுபவர்கள், கிளம்பிவிட்டார்கள். தூற்றியே நம்மைத் தீர்த்துக்கட்டி விடவேண்டும் என்ற நினைப்புடன்.
உங்க அண்ணாத்துரை ஒழிந்தான் இத்தோடு! மண்ணைக் கவ்வப்போகிறான்! பார்! பார்!—என்று மீசை முறுக்குவார்கள். அமைச்சர்களே ஆலமரத்தடி ஆரூடக்காரர் நிலைக்குத் தமது தரத்தைக் குறைத்துக்கொள்ளும்போது, வெந்ததைத் தின்று வாயில் வந்ததை உமிழும் உத்தமர்களைப்பற்றிக் கேட்கவா வேண்டும்!
திட்டுவதோடு அல்ல, தம்பி! திட்டமிட்டபடி இருக்கிறார்கள்.
காதைப் பிடித்திழுத்துத், தலையில் குட்டி, இவ்வளவுதானா உன் திறமை? என்று கேட்டுக் கண்டிக்கும் எஜமானர்கள் போன்ற நிலையில் உள்ள டில்லித் தேவதைகள், இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கிறார்கள். தி. மு. கழகத்தைத் தீர்த்துக் கட்டப்போகிறீர்களா, இல்லையானால், உங்களைத் தீர்த்துக் கட்டவா, என்று மிரட்டுகிறார்கள்.
ஈவு இரக்கமற்ற முறையில் வேலை வாங்கும் எஜமானன், உழைத்து உருக்குலைந்து கிடக்கும் வேலையாளை ஏசுகிறானல்லவா,
மூக்குப் பிடிக்கத் தின்கிறாயல்லவா?
வேளைக்குப் படி சோறு கொட்டிக் கொள்கிறாய் யல்லவா?