உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

என்ன அண்ணா! இப்படி நீ கேட்டிடிடவேண்டிய காரணம் என்ன? கடுவழி எனினும் நடந்திடுவேன்! பழிச்சொற்களைப் பொறுத்திடுவேன்! மாடும் மனையும் மறந்திடுவேன்! மலரணை துறப்பேன், மறப்பேன் இல்லம்! கூழோ களியோ, தருவர் அங்கு எனினும், அச்சிறை அஞ்சிடுவேன் அல்லேன்! ஓயாதுழைப்பேன், பலன் கேளேன்! உற்றார் எனினும் பற்றுக் காட்டினும், கொள்கைக்கல்லால் வேறெதற்கும், கட்டுப்பட்டிடேன்!—என்றெல்லாம் சொல்ல எனக்குத் தெரியாதெனினும், செய்து காட்டியவனல்லவோ! என்னைப்போய் தேர்தல் களத்தில், காங்கிரஸ் காட்டிட முனையும் தாக்குதலைத் தாங்கிக்கொள்ளும் வலிவு உனக்கு உண்டா என்று கேட்டிடலாமா?— என்று தம்பி! உன் கண் பேசுகிறது; அதிலே நீர்த்திவலை இருப்பதையும் காண்கிறேன். உன் உறுதியை உணருகிறேன், நான் உறுதி பெறுகிறேன்.

பச்சிளங் குழந்தைக்கு வந்துற்ற பயமூட்டும் நோயினை நீக்குதற்கு, மருத்துவர் கேட்டிடும் மூலிகை, வேங்கை உலவும் காடதனில், பாம்புப்புற்றுக் கருகினிலே கிடைக்கும் என்று தாய் அறிந்தால், தயக்கம் காட்டி நிற்பாளோ, தடுத்தாலும் போகாதிருப்பாளோ!!

அதுபோலத்தானே தம்பி! நாம் நமது இலட்சியத்துக்கு எதிர்ப்புக் காட்டுபவர்கள், இந்தத் தேர்தலை ஓர் வாய்ப்பாக்கிக் கொண்டு நம்மைத் தாக்கும்போது, நிலை குலையாமல், உறுதி தளராமல், தாங்கும் சக்தி நமக்குண்டு, மேற்கொண்டும் பணியாற்றும் வலிவும் நாம் பெற்றுள்ளோம் என்பதை எடுத்துக்காட்டியாக வேண்டும்.

எனவே தம்பி! தேர்தல்களத்துக்காக, ‘தளவாடம்’ பலப்பல இலட்சம் உள்ளதுவாம், என்று கேள்விப்பட்டு, நாம், நமது உறுதியைத் தளரவிட முடியுமா—தளர்ந்து போகுமா?

கோபமூட்டி நம்மைச் செயலாற்ற இயலாதவர்களாக ஆக்கிடவேண்டும் எனும் நோக்குடன், கேவல மொழிகள் பேசியும், கீழ்த்தரப் பழிகளைச் சுமத்தியும், மாற்று முகாமினரும், அவர்கட்கு ‘மேய்ப்புத் தேய்ப்பு’ வேலையினைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்களும், அங்குச் சிந்தியதைச் சிதறியதை எடுத்துவந்து சுவைத்திடும் போக்கினரும், அரசியல் பிரசாரம் என்ற பெயராலே, நாவால் நாராசத்தை வெளிப்படுத்துவர். கோபத்துக்குத் துளியும் இடன் கொடாதே! பொறுத்துக்கொள்! நீ பொங்கி எழவேண்டியது, போக்கிடமற்றவர்கள்