உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அடிப்படைப் பிரச்சினை இந்தியப் பேரரசு என்ற ஒன்றின் கீழ் அடிமையாக இருக்கத்தான் வேண்டுமா? அல்லது விடுபட்டுத் தனிஅரசு ஆகவேண்டுமா, என்பதுதான்.

தமிழ்நாடா? திராவிடநாடா என்று பிரச்சினையைப் பேசத்தொடங்கி, இந்த அடிப்படையை, விடுதலையை, தன்னாட்சியை, தனி அரசை, மறப்பதோ, இழப்பதோ, மாபெருந் துரோகச் செயலாகும்.

தமிழ்நாடா? திராவிடநாடா? என்று பேசும், இரு வேறு முகாம்கள், ஒன்றை ஒன்று எதிர்ப்பதற்காக அமைக்கப் படுகிறது என்று நிலைமை எழுந்தால், அது அந்த இரு முகாம்களுக்கு அல்ல, இந்தியப் பேரரசுக்குக் கப்பங்கட்டிக்கொண்டு, கட்டியங் கூறிக்கொண்டு, காவடி எடுத்துக்கொண்டு, மற்றவர்கள் அனைவரும் சீரிழந்து, பேரிழந்து, சிற்றினமாகக் கிடக்க வேண்டும் என்று எண்ணுபவர்களின் முகாமுக்குத்தான் வாய்ப்பு; வலிவு; மகிழ்ச்சி தரும்.

தமிழ்நாடு என்று கூறுவோர் உள்ள முகாம், திராவிட நாடு என்றுரைப்போர் உள்ள முகாம் எனும் இரு முகாம்களுமே, இந்தியப் பேரரசு எதனையும் தன் காலடியில் போட்டு மிதிக்கும் நினைப்புடன், நிலையுடன், வலிவுடன் இருத்தல்வேண்டும் என்று திட்டமிட்டுக் கொட்டமடிக்கும் முகாமுக்கு எதிர்ப்பாக அமைந்தவை என்று திட்டவட்டமாக நிலைமை தெளிவுபடுத்தப்பட்டாக வேண்டும்.

தமிழ்நாடா? திராவிடநாடா? என்ற பேச்சைப் பெரிதுபடுத்தி அதற்குப் பேருருவம், போருருவம் கொடுப்பதை, இந்தியப் பேரரசு புன்னகையுடன் வரவேற்கும்!

தமிழ்நாடா? திராவிடநாடா? என்று இரு முகாம்களும் போரிட்டு மடியட்டும், நாம் கொடிகட்டி ஆண்டிடுவோம்—கொழுத்துத் திரிந்துகொண்டிருப்போம் என்று திட்டமிடும்.

தமிழ்நாடா? திராவிடநாடா? என்று சச்சரவு எழட்டும். அந்தச் சச்சரவிலே இரு முகாம்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, நாம் நமது ஆதிக்கத்தை வலிவுள்ளதாக்கிக் கொள்ளுவோம், என்று ‘ஏக இந்திய’ முகாம், எண்ணி இறுமாந்து கிடக்கும்.

தமிழ்நாடா? திராவிடநாடா? என்ற பிரச்சினையைக் கிளப்பிவிட்டுவிட்டு, ‘ஏக இந்தியா’ எனும் ‘பகைமுகாம்’