உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

நாடு’ எனும் திட்டத்தினிடம் பரிவுகாட்டுவதுபோலப் பொய்க்கோலம் காட்டுவர்; உண்மை நிலைமை, அஃதன்று.

பெயரும் வகையும் முறையும் அளவும் எதுவாக இருப்பினும், தமிழ்நாடு என்று இருப்பினும், திராவிடநாடு என்று இருப்பினும் உரிமை உணர்ச்சியாக, விடுதலை வேட்கையாக தனி அரசுத் திட்டமாக, இருக்கும், எதனையும் ‘ஏகஇந்தியாக்கள்’ எதிர்த்து ஒழிக்கத்தான், ஆதிக்கத்தால் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்துவரேயன்றி, இரண்டில் ஏதேனும் ஒன்றை ஆதரித்து, மற்றதை எதிர்ப்பர் என்று மதியிலியும் கூறமாட்டான்.

பிரிந்துபோகிறோம்—பேரரசுக்கு எடுபிடியாக இருக்க மாட்டோம்—தனி அரசாகிவிடப் போகிறோம் என்ற முழக்கம், எங்கிருந்து கிளம்பினாலும், தமிழ்நாடு பேசும் முகாமிலிருந்து எழும்பினாலும், திராவிடநாடு கேட்கும் பாசறையினின்று கிளம்பிடினும், ஏக இந்தியாக்களுக்கு, வெறுப்புத்தான் உண்டாகும்.

இந்தியப் பேரரசு, ‘பேரரசாக’ இருக்கவேண்டும் என்று தான் எண்ணுகிறதேயன்றி, பிரிவினை, தமிழ் நாடாக இருந்தால் பரவாயில்லை, திராவிடநாடுதான் கூடாது என்ற நிலையில் இல்லை; இருக்கமுடியாது.

பிரிவினை கூடாது—பேரரசு உடைபடக்கூடாது—தனி அரசு அமையக்கூடாது—என்ற இதிலே தான், இந்தியப் பேரரசு கண்ணுங்கருத்துமாக இருக்கும் — தமிழ்நாடா? திராவிடநாடா? என்ற அளவுபற்றிய அக்கரை கொண்டது போலச் சிலருக்குத் தூபமிட்டுப் பேச வைப்பதுகூட, மொத்தத்தில், ‘தனி அரசு’ கேட்கும் உரிமை உணர்ச்சியை மாய்க்கவேயன்றித், தமிழன் என்ற உணர்ச்சியை மதித்திட அல்ல.

திராவிடநாடு கூடாது நடவாது என்று, தமிழ் நாடு கேட்போர் கூறுவதாகப் பெரிதுபடுத்திப் பேசும், ஏகஇந்தியாக்களின் நோக்கம், ஏகஇந்தியா உடைபடாதிருக்கவேண்டும் என்பதுதான்.

அஃதேபோல, திராவிடநாடு எனும் திட்டத்தார், தமிழ் நாடு மட்டும் தனிநாடு ஆகவேண்டும் என்ற வாதத்திலே உள்ள குறைபாடுகளைப் பேசும்போது அக்கரை காட்டி அதனை எடுத்துரைப்பதும், ‘ஏக இந்தியா’ எனும் திட்டத்தைக் காப்பாற்றத்தான்.