26
நெஞ்சுடையப் பாடுபட்ட நீர்மையார் தென்னாட்டில்
பஞ்சடைந்த கண்ணாய்ப் பரிதவிக்க—அஞ்சாமல்
மிஞ்சிய செல்வத்தை மேவிச் செழிக்குதடா
வஞ்சனையாளர் வடக்கு.
★
நாடாண்ட தென்னவர்கள் நாதியற்று வாழ்விழந்து
ஓடாகி நாளும் உழைத்தாலும்—வாடாமல்
நெஞ்சில் இரக்கமின்றி நித்தம் வதைக்கின்றார்!
வஞ்சனையாளர் வடக்கு.
★
இத்தகைய விடுதலை உணர்ச்சி கொப்பளிக்கும் வெண்பாக்கள், வீரமுழக்கங்கள், யாவுமே மாறி, இப்போது ஏன் விலகினோம் என்பதற்கான ‘நொண்டிச் சிந்தும்’— வடக்குக்குக் ‘காவடிச் சிந்தும்’, நேரு பெருமகனாருக்குத் ‘திருப்புகழ்’ பாடுவதுமாகவா, இவர்கள் மாறிவிடவேண்டும். இதைக் காணும்போது,
வஞ்சனையாளர் வடக்கு என்ற வாயினரே!
வாஞ்சனையும் கொண்டீரோ வடவர் பாலே!
கிடக்கின்றான் காஞ்சியிலே கிழடு தட்டி!
கிளர்ந்தெழுந்து காட்டிடுவீர் உமதுவீரம் வடக்கு நோக்கி!
என்றல்லவா, தம்பி! கேட்டிடத் தோன்றும்.
வெண்பாவா இது! என்று கவிதை கற்றோர் கேட்கக் கூடும். தம்பி! எனக்கு அந்த இலக்கணம் தெரியாது. ஆனால் இதுதான் இவர்தம் போக்குக்கண்டு, பேச்சுக்கேட்டு, நாடு தந்திடும் புதுப் பா!
18-6-61
அண்ணன்,
அண்ணாதுரை