உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

காண்போருக்கெல்லாம் மகிழ்ச்சி தந்திடச் செய்யவேண்டும் என்று எண்ணுவான்.

சிற்பிகள் இருந்தனர்—அவர்களுக்கு இந்தச் சிந்தனை இல்லை! இவனுக்குச் சிந்தனை இருந்தது—ஆனால் அவன் சிற்பி அல்ல!!

“அன்னப் பெடையா? அலர்ந்த மலரா? அன்னமூட்டும் அன்னையா? — அழகாகத்தான் இருக்கும் மிக அழகாக! ஆனால், வேலை நிரம்ப இருக்கிறது, ஏற்றுக்கொண்ட வேலை! வயிறு வேறு இருக்கிறது!!—என்று கூறுவர் சில சிற்பிகள்—உளியை எடுப்பர், ஏற்றுக்கொண்ட வேலைக்காக.

திறமை அற்றவர்களோ எனில், அங்ஙனம் எவரும் கூறார்! முகத்திலே ஏற்பட்டுவிட்ட சுருக்கங்களை, அப்படியே சிலையில் வடிப்பதுதான். சிற்பிக்கு உள்ள அறம்! ஆனால், பணம் கொடுக்கும் சீமான், அதைக் கண்டால் சீறுவாரே! அவர் என்ன, தன்முகத்திலே காலக்கரம் கோடுகளை இழுத்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாரா!! அல்லது அவருக்குக் காதலி வேலைபார்க்கும் காரிகை அதனைக் கவனப்படுத்துவாளா!! தன் முகத்திலே ஒரு கெம்பீரம், ஒரு கவர்ச்சி இருப்பதாக அவர் எண்ணுகிறார்—சிற்பி அதனை அறிவானே! எனவே, உள்ளதை உள்ளபடி காட்டினால், உயிரே போனாலும் போய்விடும்; எனவே கலை பிறப்பிக்கும் கட்டளையைக்கூட மீறுகிறான்! சுருக்கமின்றிச் சிலை சமைக்கிறான்! கலைஞன் மீறக்கூடாத அறத்தை மீறுவதை எண்ணுகிறான். கவலை தாக்குகிறது, முகத்தில் சுருக்கம் விழுகிறது.

சீமான்களும் சீமாட்டிகளும் சிலைவடிவ மெடுக்கின்றனர்; சிலையைக் கண்டுவிட்டு, அவர்களைக் காண்பவர் ஏமாற்றமடைகின்றனர்! ஏமாற்றத்தை வெளியே எடுத்துரைக்கவும் இயலாத நிலை! பாராட்டுகிறார்கள், சிற்பியை; சிற்பிக்கோ, வேதனை, வெட்கம்!

இந்த வேதனையும் வெட்கமும் போதாதென்று, காலத்தை வெல்லும் கவின்மிகு காட்சிகளை வடித்தெடுக்கச் சொல்கிறான் வாழ்வுக்காக என்னென்ன பாடுபடவேண்டி நேரிட்டு விடுகிறது என்பதறியாதான்! அன்னப் பெடையாம்! அழகு மயிலாம்! அலர்ந்த மலராம்!—ஆமாம்! இவைகள் செதுக்கப் படவேண்டியவைகள்தான். தெரியும். முடியும். ஆனால், செதுக்கினால், பலன்? உளி தூக்கும் அளவுக்குக்கூட உடலிலே வலிவு இராதே! பட்டினியல்லவா கிடக்கவேண்டி நேரிடும்!!