உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

“ஊரே திரண்டு நின்று புகழப் போகிறது என்று எதிர்பார்த்தேன்.”

சிற்பியும் சிந்தனையாளனும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த உளி ஏந்துவோன், ‘களுக்’ கெனச் சிரித்தான். இருவரும் திரும்பிப் பார்த்தனர்; சிந்தனையாளன் சீற்றத்துடன்; சிற்பி, ஏதும் புரியாத நிலையில்!

“மன்னிக்க வேண்டும்”

“அடக்கம் போதும்! சிரித்த காரணம்?”

“தங்கள் பேச்சுக் கேட்டுச் சிரிப்பு......”

“வயிறு எரிந்து பேசுகிறேன் நான்! உனக்குச் சிரிப்பு வருகிறது. உம்!”

“கோபம் கொள்ளாதீர் ஐயா! சிலையைக் கண்டு ஊரே திரண்டு நின்று கொண்டாடும் என்று எதிர்பார்த்ததாகச் சொன்னீர்கள்...”

“ஆமாம்! எதிர்பார்த்தது தவறா? சிலை, அத்தகைய பாராட்டுதலைப் பெறத்தக்க ஏற்புடையது அல்லவா?”

“என் ஆசானின் திறமையை நான் நன்கு அறிவேன். சிலை, முதல் தரமானது! எவரும் கண்டு பாராட்டத்தக்கது. ஐயம் எவர்க்கும் எழாது! பாராட்டத்தக்க நிலையில் உள்ள சிலையைப் பாராட்டுவது தங்கள் கடமை என்று அறியும் உணர்வு, மக்களில் பெரும்பாலாருக்குக் கிடையாது...”

“பாராட்டத் தெரியாது—அதாவது, நான் சொன்னபடி. மக்களுக்குக் கலை அறிவு இல்லை.”

கலை அறிவு எப்படிப்பட்டது என்று எடுத்துரைக்கத் தெரியாது. ஆனால் கலை அறிவே இல்லை என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. மேலும், மிக நேர்த்தியாகத்தான் இருக்கிறது என்று மனதிலே எண்ணிக் கொள்வார்கள்—பேச மாட்டார்கள்!”

“அதுதான் தவறு என்கிறேன்.”

“அதுதான் மக்கள் இயல்பு!”