35
ஆனால், மக்கள்? பார்த்தனர், நன்றாகத்தான் இருக்கிறது என்றுரைத்தனர்—மறுகணமோ, ஏருடன் சென்றான் ஒருவன்; எருது தேடிச் சென்றான் இன்னொருவன்; பருகச் சென்றான் ஒருவன்; பண்டம் பெறச்சென்றான் மற்றொருவன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டனர்! என்ன செய்வர்? வேலை இருக்கிறதே நிரம்ப. ஏற்றுக்கொண்ட வேலை! வயிறு இருக்கிறது! அது வேறு!
மக்களின் இந்த அக்கரையற்ற போக்குக்கண்டு மனம் கொதித்த சிந்தனையாளனுக்கும், அதை மறைத்திட முயன்ற சிற்பிக்கும். உளியேந்தி திடுக்கிடத்தக்க பேச்சல்லவா, சொன்னான். ஊரே பேசத்தானே வேண்டும் சிலையைப்பற்றி? பேசவைக்கிறேன்!! என்று. எப்படி என்று இருவரும் யோசித்தனர். உளியேந்தி திட்டம் வகுத்துக்கொண்டான்,
‘விர்’ரென்று பறந்துவந்து வீழ்ந்தது ஒரு கல்! சிலைமீது ‘கல்’லென்ற ஒலி கேட்டது! வழியே சென்றோர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்! சிலைமீது பட்டுத் தெறித்தது, கல்!!
யார் இந்தக் காரியம் செய்தது?
என்ன ஈனத்தனமான காரியம் இது?
கல்லெறியும் கயவன் யார்?
சிலை, இவனை என்ன செய்தது?
சீற்றத்துக்குக் காரணம் என்ன?
சீற்றமா, புத்தித் தடுமாற்றமா?
ஏமாளியா! அல்லது எவரேனும் ஏவிவிட்டனரா?
இவ்விதமான பேச்சு எழுந்தது! கற்கள். ‘விர்விர்’ரெனப் பறந்துவந்து, சிலைமீது விழுந்தவண்ணம் இருந்தன!
கற்கள் சிறியவை—சிலை பெரிது! கற்கள் வீழ்வதால் ஓசை கிளம்பிற்று — சிலைக்குச் சேதம் இல்லை!
மக்கள் பரபரப்பு அடைந்தனர்! இங்குமங்கும் பதறி ஓடினர்! எதிர்ப்பட்டோரிடம் கூறினர்!
சிலைமீது கல்லெறிகிறார்கள்!
சிலையை உடைக்கிறார்கள்!