உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இல்லங்களிலே இன்ப உரையாடல், திருப்பரங்குன்றம் சென்றிடலாம், திருவிடத் தீரரைக் கண்டிடலாம். தேன்நிகர் பேச்சினைச் சுவைத்திடலாம். உரிமைக்கோர் வழி கண்டிடலாம், என்பதுபற்றியே! செந்தாமரையின் அழகு, கண்ட போது ! மல்லிகையின் மணம் முகர்ந்தபோது! செங்கரும்பின் சுவை உண்டபோது! தாயகவிடுதலைக்கான மாநாடு அளித்திடும் மகிழ்ச்சி, எண்ணிடும் போதெல்லாம் இனிக்கும்! பேசிடும் வாய் மணக்கும்! ஏன்? மாநாடு, மானமும் மரபும் காத்திடும் மறவர், கூடி எழுப்பிடும் இலட்சிய முழக்கம் நெஞ்சினில் பதிந்து, நம்மை வீரராய், தீரராய், திராவிடராய் ஆக்கிடத்தக்க கொள்கைக் கோட்டம், திருப்பரங்குன்றம்! தம்பி! திருப்பரங்குன்றம், திராவிடர்க்காக! அறிவாய், நீ! அறிவிப்பாய், மற்றவர்க்கு!!

குடும்பத்துடன்

வருகிறேன், திருப்பரங்குன்றம்! செல்கிறேன் திருப்பரங்குன்றம்! செல்வோம் திருப்பரங்குன்றம்! இல்லங்களின் இன்றையப் பேச்சு இது. வரவேற்புக் குழுத்தலைவர் மதுரை முத்து, பொட்டல் காட்டைப் பூம்பொழிலாக்கக் காத்திருக்கிறார், களிப்பூட்ட! இசைகேட்டு இன்புறுவோம்! வீரக்காதைகள், விடுதலை வரலாறுகள், இலக்கியச் சுவையுடன்!! ஆட்சி முறை, அறவழி ஆகியவைபற்றிய பேருரைகள். மாநாட்டிலே கெனியாடா, திவேலரா, நாசர், ஹோசிமின், போர்க்யூபா, மகாரியாஸ், என்க்ருமா மற்றும் எண்ணற்ற விடுதலை வீரர்கள், வெற்றிபெற்ற வரலாறு கேட்டு, உணர்ச்சிபெறப் போகிறோம். புதிய நம்பிக்கை பெற இருக்கிறோம். நாடகங்கள் உண்டு, நற்கருத்தளிக்க. கழகக்காவலர் அனைவரும் கூடுமிடம், திருப்பரங்குன்றம்! வாழ்நாளில் மறக்கொணாத அரிய நிகழ்ச்சி! நெஞ்சை அள்ளும் எழில் பல மிஞ்சும் வண்ணக்களஞ்சியம், திருப்பரங்குன்றம்! வீட்டிலே சிலர் விம்மிக்கிடக்க, நீவீர் மட்டும் விருந்துண்ண வருவது அழகல்ல! குடும்பத்துடன் வருக திருப்பரங்குன்றம்!— எனறு கூறிடத் தோன்றுகிறதல்லவா!!

வீரருக்கு அழைப்பு

கண் திறந்தது! கருத்து மலர்ந்தது! கழகம் அழைத்தது! கடமை புரிந்தது! எழுந்தனர்! வீரர் எழுப்பினர் முழக்கம்! இன்பத் திராவிடம் எமக்கே, என்று.