உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அம்பு ஏராளம்; நிலபுலம் நிறைய; ஊரிலே செல்வாக்கு; இவ்வளவும் பெற்றுத் திகழ்ந்த மோதிலால் நேருவின் திருக்குமாரர். பல ஆண்டுகள் இங்கிலாந்திலே படித்துப் பட்டம் பெற்றவர், இதுபோல, வழக்குமன்றம் நின்று முழக்கமிடக் கேட்பவர்கள், எழுச்சிப் பிழம்பாகிவிடுவரன்றோ! ஆமாம்! அதற்குத்தானே அவரும் அவ்விதம் பேசினார் — வழக்குமன்றத்தினருக்காகவா அந்தப் பேச்சு— நாட்டு விடுதலை வீரர்களுக்காக!!

நேருபண்டிதர், உலகிலே பல நாடுகள் விடுதலை பெற நடத்திய, வீரக்காதைகளை, காப்பியங்களை நன்கு கற்றுணர்ந்தவர் — விடுதலைப்போர் நடத்தியவர்களில் சிலரைக்கண்டும் பேசியவர் — விடுதலைப் போரிலே வீழ்ந்துபட்டவர்களின் கல்லறையின் மீது, விடுதலை பெற்ற மக்கள், கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தும், உள்ளமுருக்கும் காட்சிகளைக் கண்டவர்—எனவே, அவருக்கு, வழக்குமன்றத்திலே நிற்கும்போது, தம்மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள். சட்டப்புத்தகத்திலே, அவைகளுக்காகத் தரப்பட்டுள்ள விளக்கங்கள், எனும் இவை அல்ல, நிச்சயமாக, விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் அணிவகுப்புத்தான் தெரிந்திருக்கும். நான் கண்டேனே, கோலாகலமாகக் கொடி ஏந்திச் சென்றவர்கள் அந்த அணிவகுப்பிலே, மருந்துக்குக்கூட அப்படிப்பட்ட, விடுதலைப் போர்புரிந்த மாண்பினர், கிடையாது! ஆகவேதான், மிக உரத்த குரலிலே முழக்கமெழுப்பினர்! தம்பி! குயிலுக்கு முடிகிறதா, காக்கை போலக் கரைய!! இனிமை என்று எண்ணிக்கொண்டு, வலிவற்ற குரலெழுப்புகிறது! காக்கை அப்படியா! காதைக் குடைந்தெடுத்து விடுகிறதல்லவா? உள்ளபடி, விடுதலைப் போரிலே ஈடுபட்டுக் களம் நின்று, தாக்குதலுக்கு ஆளாகித் தழும்பேறப் பெற்றவர்கள், அன்று பேசக்கூட இயலாதபடி, கண்கள் களிப்புக் கவிதை பாடிடும் நிலையில் இருப்பர். கட்டித் தங்கம், பூமிக்கடியில் தானே தூங்கிக்கொண்டிருக்கிறது! சிறு தகரத்துண்டுகள், கண்களைப் பறித்துவிடும் விதமான, ஒளி கிளப்பிக் கொண்டல்லவா உள்ளன — வெயில் வேளையில்! கடலுக்கு அடியில் அல்லவா முத்து உறங்குகிறது! கடலோர மணலில், குவியல் குவியலாக உள்ளவை? வெறும் கிளிஞ்சல்கள்!!

“விடுதலை பெற்றோம். விழி பெற்றோம்” என்றார் ஓர் பேரறிவாளர்! ஒரு நாட்டின் எழில், ஏற்றம், வளம், வாழ்வு, யாவும், வேற்று நாட்டானிடம் நாடு சிக்கிக் கிடக்கும்போது,