பக்கம்:தம்பியர் இருவர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 14.5

னுடைய பண்பாட்டில் ஈடுபட்டு அவனைத் தன் வழிபடு கடவுளாகவே மதித்துப் போற்றுகிறான். இவ்வழிபாடு அவனை மேலும் மேலும் உயரத் தூண்டுகிறது. உலகிடை மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஒரு குறிக்கோள் தேவைப்படுகிறது. குறிக்கோள் இல்லாதவன் புற உடல் அமைப்பில் மனிதனாகவே காணப்படினும் ஆன்றோரால் மனிதனாக மதிக்கப்பட மாட்டான். குறிக்கோள் இலாது கெட்டேன்!” (நாவு. தேவாரம். 4: 67; 9) என்று நாவுக்கரசு நாயனாரும் தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே’ (புறம். 182) என்று சங்கப் புலவரும் முழங்குகின்றனர். ஒருவருடைய குறிக்கோள் எத்தகையதாக இருத்தல் வேண்டும் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், மேற்கொண்ட குறிக்கோளுக்கு எத்தகைய இடையூறு நேர்ந்தாலும் உயிரை விட்டேனும் குறிக்கோளைக் காக்கவேண்டிய கடமை, குறிக்கோளை மேற் கொண்டவர்கட்கு உண்டு.

பரதனும் ஒரு குறிக்கோளை மேற்கொண்டிருந்தான். அது யாது? தன் மூத்தோனாய இராமனைப் போற்றி வழி பட்டு அவன் வழி நிற்றலாம். அவனுடைய ஒவ்வொரு பேச்சும் இராமனைப் பற்றிய புகழுரையாகவும், அவ னுடைய ஒவ்வொரு செயலும் இராமனுக்கு உகந்ததாகவும் இருப்பதே அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோள். மிகச் சில சொற்களே பேசும் இயல்புடையவன் பரதன். மிக இன்றியமையாத சந்தர்ப்பம் நேர்ந்தால் ஒழியப் பேச மாட்டான்; பேச வேண்டிய வாய்ப்பு நேர்ந்த பொழுதே பேசுகிறான். அவன் எப்பொழுது வாய் திறந்தாலும் பயனற்ற சொல் ஒன்றுகூட அவன் வாயிலிருந்து வெளியாவ தில்லை. மிகுதியும் தன் அடக்கம் உடையவர்கட்கே இவ்வாறு வாய் மூடி அதிகம் பேசா திருக்கும் இயல்பு அமையக் கூடும். எனவே, பரதன் மிகுதியும் அடக்கம் உடையவன் என்பது இதனாலும் பெறப்படுகிறது.

த.-10 -