பக்கம்:தம்பியர் இருவர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் னுரை

கம்பநாடன் கலைக்கோயில் பற்றிய திறனாய்வில் நாடும் மன்னனும் என்ற நூலில் தந்தை பற்றியும், அரசியர் மூவர்' என்ற நூலில் தாயர் பற்றியும் பேசப்பட்ட தாகலின், அவற்றையடுத்து வெளிவரும் இந்நூல் மக்கள் பற்றிப் பேசுதல் முறைதானே? தசரதன் அரசனாதலின், அவனுக்கு இருவகை மக்கள் உண்டு. அவர்கள், பெற்ற மக்களும், கீழ் வாழும் மக்களும் எனப்படுவார்கள். அவன் பெற்ற மக்களுள் ஒருவனாகிய பரதனும், அவன் கீழ் வாழும் மக்களுள் ஒருவனாகிய குகனும் இந்நூலிற் பேசப்படுகின் றனர். காப்பியத் தலைவனாகிய இராமபிரான் தந்தை மூலம் பெற்ற தம்பியாவான் பரதன் தானே விரும்பி ஏற்ற தம்பியாவான் குகன். இவ்விருவருடைய பண்பாடுகளையும் புலவன் எவ்வாறு கூறுகிறான் என்பதைக் காண்டலே இந்நூலின் நோக்கம். -

'இராமனுக்கு உடன்பிறந்த தம்பியர் மூவரும் அவன் ஏற்றுக்கொண்ட தம்பியர் மூவரும் இருக்க, ஏன் குகனை யும் பரதனையும் மட்டும் இங்குப் பேசவேண்டும்?' என்று வினவப்படலாம். தம்பியர் அறுவரினும் இவ்விருவருமே ஒற்றுமையுடையவர்: இராமனிடத்து ஆரவாரமற்ற முறை யில் ஆழ்ந்த அன்பைச் செலுத்துபவர். இந்த முறையில் இருவருக்கும் ஒற்றுமை காணப்படுகின்றது. ஒரு வேற்றுமை யும் இவர்களிடையே உண்டு. பரதன் கற்றறிவு நிரம்பப் பெற்றவன்; குகன் கல்வி வாசனை அற்றவன். இப்பெரு வேற்றுமை இருந்தும், இவ்விருவரும் ஒருநிகராகவே இராம னால் மதிக்கத்தக்கவர் ஆகின்றனர். ஆதலாலேதான் இவ்விருவர் பற்றியும் ஆய்தல் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நூலைச் செவ்விதின் பதிப்பித்து வெளி க் கொணரும் கங்கை புத்தக நிலையத்தாரிடைப் பெரு நன்றியன்.

ஆசிரியன்