பக்கம்:தயா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி கரீனம் பெருகிக்கொண்டே வந்து அவனைக் கட்ட ஆரம்பித்தது. குப்பை மேடுகளிலும் குன்றுகளிலும் குஹைகளிலும் சுற்றிக்கொண்டிருந்த சிந்தனைகள் ஒரு முகப்படத் துவங்கின. நெருப்பு உருகி ஒழுகுவதுபோல் சுருதியோடிழைந்த குரல் உள்வழிந்து நிரம்பி மற்ற ஒசைகளின் உணர்வை அப்புறப் படுத்தியதும், நிதானமாய், படிப்படியாய், வேகமாய் அகாரங்கள் மேலே கொக்கிகளை மாட்டி, குழந்தையைக் குளத்தில் முழுகக் கையைப் பிடித்து இழுப்பதுபோல், அவை அனைத்தும் அத்தனைக் கைகளாகப் அவனைப்பற்றி தோட்டத்திலிருந்து வீட்டுள் இழுத்தன. தன்னைத் தனக்கு ஞாபகமூட்டிக்கொள்ள, நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு நின்றான். இழுத்துப் பிடித்த கம்பியால் நினைவு ஒருகணம் நிலைத்து நின்றது. பெருமூச்செறிந்தான்; உள்ளே சென்றான், - வாசற்படியில் சற்றுத் தயங்கினான். அவ்வறையிலேயே வெளிச்சம் மட்டும்தான். எப்போதும் அங்கு ஒரு சிறு இருட்டு தேங்கியேயிருந்தது. அவ்விடந்தான் அவளுக்கு இஷ்டம். தம்பூராவைத் தழுவிய அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. உள்ளே வந்து அவள் அருகில் உட்கார்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/27&oldid=886324" இலிருந்து மீள்விக்கப்பட்டது