உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தராசு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

தராசு:— “உண்டு. மனோதைரியமில்லாத பேடிகள் புழுக்களாகப் பிறப்பார்கள். பிறர் துன்பங்களை அறியாமல் தமதின்பத்தை விரும்பினோர் பன்றிகளாகப் பிறப்பார்கள். சொந்த பாஷை கற்றுக்கொள்ளாதவர் குரங்குகளாகப் பிறப்பார்கள். சோம்பேறிகள் எருமைகளாகப் பிறப்பார்கள். அநீதி செய்வோர் தேளாகப் பிறப்பார்கள். பிறரை அடிமைப்படுத்துவோர் வண்ணான் கழுதைகளாகப் பிறப்பார்கள். ஸ்திரீகளை இமிசை செய்வோர் நபும்ஸகராப் பிறப்பார்கள். ஸமத்துவத்தை மறுப்போர் நொண்டிகளாகப் பிறப்பார்கள். கருணையில்லாதவர் குருடராகவும், தமது கல்வியைப் பிறருக்குக் கற்றுக் கொடாதவர் ஊமைகளாகவும், அச்சமுடையோர் ஆந்தைகளாகவும் பிறப்பார்கள். மறு ஜன்மம் வரையிலே கூடப் போக வேண்டாம். இந்த ஜன்மத்திலேயே பாவி, கோழை முதலியவர்கள் தாழ்ந்த ஜந்துக்களாக இருப்பதை அவர்களுடைய அந்தக்கரணத்திலே பார்க்கலாம்.”

வக்கீல்:— ”ஏன் தராசே, பயப்பட்டால் அது கூட ஒரு பாவமா?”

தராசு:— ”ஆம். அதுதான் எல்லாப் பாவங்களுக்கும் வேர். அதர்மத்தைக் கண்டு நகைக்காமல் எவன் அதற்கு பயப்படுகிறானோ அந்த நீசன் எல்லாப் பாவங்களும் செய்வான். அவன் விஷப்பூச்சி; அவன் தேள்; அவனை மனித ஜாதியார் விலக்கி வைக்க வேண்டும்.”

வக்கீல்:— ”அப்படியானால் மனோதைரியம் ஒரு புண்ணியமா?”

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/30&oldid=1770181" இலிருந்து மீள்விக்கப்பட்டது