பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்ற பாராட்டுகள்

பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக்கவிஞர், கவிமாமன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர், கவிதை இமயம், தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் பாட்டு முடியரசர், கவியுலக முடியரசர், சுயமரியாதைக் கவிஞர், தமிழிசைப் பாவலர், தமிழியக்கக் கவிஞர்.

வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர், திமிர்ந்த ஞானச் செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத் தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப் பிழையார். ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், ஆசிரியர் போற்றுபவர், நன்றி மறவாதவர், நட்புப் பெரிதென வாழ்ந்தவர், பகுத்தறிவாளர், மனிதநேயர், பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், கசயம் அறுத்தவர், பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ் கண்டு கூசுவார், அன்பு நெஞ்சினர். குழந்தை உள்ளத்தினர், பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி விரும்பி, குறிக்கோள் வாழ்வினர்.

இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்கமாக, தன் மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர். பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும் அரசவைப் பதவிகள் நாடிவந்த போதும், அவற்றைப் புறக்கணித்தும் 'வளையா முடியரசர்' என்றும் 'வணங்கா முடியரசர்' என்றும் புகழ்பெற்றவர், தன்மானக் கொள்கையால், மைய, மாநில அரசுகளின் பல அரிய விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் உணர்வாளர்களாக்கியவர், கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனைத் தந்தையாகவும் கருதிக் "குலமுறை கிளத்தும்" கொள்கையுடையவர். 'தன்னை மறந்த லயம் தன்னில்' இருக்கும் இயல்பினார்.