பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

மக்சீம் கார்க்கி


அதுமாதிரி அந்தப் பிரசுரங்கள் எங்கே பார்த்தாலும் பரவியிருக்கின்றன. அவர்கள் சோதனை போட்டதிலும், கைது. செய்ததிலும் குறைச்சலில்லை. என் மருமகன் மாசினைக்கூட அவர்கள் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்கள் எதற்காக? உன் மகனைக்கூடத்தான் உள்ளே தள்ளினார்கள். ஆனால் என்ன ஆயிற்று? இந்தப் பிரசுரங்களுக்கு இவர்கள் காரணமில்லையென்பது இப்போது எல்லோருக்குமே தெரிந்து போயிற்று’.

அவன் தன் தாடியைக் கையில் அள்ளிப்பிடித்துக்கொண்டு அவளைப் புதிர் நிறைந்த கண்களோடு பார்த்தான்.

“நீ ஏன் என் வீட்டுக்கு வரக் கூடாது? தன்னந்தனியே இருப்பது உனக்கும் சங்கடமாகத்தானிருக்கும்.”

அவள் அவனுக்கு நன்றி கூறினாள். உணவுப் பண்டங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே, வழக்கத்திற்கு மாறான ஒரு உற்சாகம் தொழிற்சாலையில் நிலவுவதைக் கூர்ந்து கவனித்தாள். தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் வந்தார்கள். ஒரு தொழிற்கூடத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடினார்கள். கரிப்புகை படிந்த அந்தச் சூழ்நிலையில், ஏதோ ஒரு தைரியமும், துணிவும் நிரம்பி பிரதிபலிப்பதாக அவளுக்குத் தோன்றியது. இங்குமங்கும் எண்ணற்ற பேச்கக் குரல்கள் கேட்டன. கிண்டலான பேச்சுக்களும் உற்சாகம் ஊட்டும் பேச்சுக்களும் ஒலித்தன. வயதாகிப்போன தொழிலாளர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்கள். கவலை தாங்கிய முகங்களோடு முதலாளிகள் அவர்களைக் கடந்து சென்றார்கள். போலீஸ்காரர்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் கூட்டமாக நிற்கும் தொழிலாளர்கள் மெதுவாகக் கலைந்து பிரிந்தார்கள்; அல்லது பேச்சு மூச்சற்றுக் கம்மென்று நின்றார்கள்; அப்படி நின்று கொண்டே, எரிச்சலும் கோபமும் மூண்டு பொங்கும் அந்தப் போலீஸ்காரர்களின் முகங்களை வெறித்துப் பார்த்தார்கள்.

எல்லாத் தொழிலாளர்களும் அப்போதுதான் குளித்து முழுகி வந்தது போலத் தோன்றினார்கள். கூஸெவ். சகோதரர்களின் மூத்தவன் விரைவாக நடந்து சென்றான்; அவனது தம்பி அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே அவன் கூட ஓடினான்.

தச்சுப் பட்டறையின் கங்காணியான வவீலவ், ஆஜர்ச் சிட்டைக் குமாஸ்தாவான இசாய் முதலியோரும் தாயைக் கடந்து சென்றார்கள். குள்ளமான அந்த நோஞ்சான் குமாஸ்தா தன் தலையைத் திருப்பிச் சுற்றுமுற்றும் பார்த்தான்; பிறகு அந்தக் கங்காணியின் சுருங்கிப் போன முகத்தை ஏறிட்டுப் பார்த்தவாறு, தனது தாடியைத் துடைத்துக்கொண்டே சளசாத்துப் பேச ஆரம்பித்தான்.