பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

139


“நீ யாரைச் சொல்லுகிறாய்?” என்று ஏதோ யோசித்தவாறே கேட்டான் ரீபின்.

“அவர்கள் எல்லோரையும்தான், நான் கண்டறிந்த அத்தனை பேரையும்தான்!”

“அம்மா, நீ இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இன்னும் எட்டிப் பார்க்க வேண்டும்” என்று தலையைத் தொங்க விட்டுக்கொண்டே சொன்னான் ரீபின். “நம்மோடு சேர்ந்து உழைக்கிறார்களே. அவர்களுக்கே இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம், அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் நம்பிக்கொண்டிருப்பதே உண்மை என்கிறார்கள். ஆமாம், அது அப்படித்தான், ஆனால் அவர்களுக்குப் பின்னால் மற்றவர்கள் நிற்கலாம்; தங்கள் சுயநலத்தையே பெரிதாக மதிக்கும் மனிதர்கள் நிற்கலாம். ஒரு மனிதன் தனக்குத்தானே எதிராக வேலை செய்வானா?”

பிறகு அவன் ஒரு விவசாயியின் கடுமையான நம்பிக்கையோடு பேசினான்.

“ இந்தப் படித்த சீமான்களால் எந்த நன்மையும் என்றுமே விளையப் போவதில்லை.”

“நீ என்ன செய்வதாக நினைத்திருக்கிறாய்?” என்று மீண்டும் சந்தேக வயப்பட்டவளாய்க் கேட்டாள் தாய்.

“நானா?” என்று அவளைப் பார்த்துக் கூறிவிட்டு மௌனமானான் ரீபின். பிறகு சொன்னான். “இந்தச் சீமான்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. அதுதான் சங்கதி!”

மீண்டும் அவன் சோர்ந்து குன்றி, மௌனமானான். “நான் இந்தத் தோழர்களோடு சேர்ந்து உழைக்க விரும்பினேன், அந்த மாதிரி வேலைக்கு நான் லாய்க்குத்தான், மக்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்போதோ நான் விலகிச் செல்கிறேன். எனக்கு நம்பிக்கை அற்றுவிட்டது. எனவே நான் போகத்தான் வேண்டும்.

அவன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

“கிராமங்களுக்கும் நாட்டுப் புறங்களுக்கும் போகப் போகிறேன்; போய், அங்குள்ள சாதாரண எளிய மக்களைத் தூண்டிவிடப் போகிறேன். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களே வழிதேடி முனையவேண்டும், அவர்களுக்கு உண்மை புரிந்துவிட்டால், தங்கள்