பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

157


"அப்படியா! ஒரு முட்டாள்தான் உன்னை இப்படி எதிர்ப்பான்’ என்றான் ஹஹோல்.

“முட்டாளும் புத்திசாலியும் ஒரே இனம்தான்’ என்று உறுதியோடு சொன்னான் நிகலாய். “உன்னையும் பாவெலையும்தான் பாரேன், நீங்கள் இரண்டு பேரும் புத்திசாலிகள்தான். இருந்தாலும் நீங்கள் பியோதர் மாசிளையும், சமோய்லவையும் பார்க்கிற மாதிரியா என்னைப் பார்க்கிறீர்கள்? இல்லை, நீங்கள் ஒருவரையொருவர் மதித்துக் கொள்வது போல் என்னை மதிக்கிறீர்களா? பொய் சொல்லாமல் சொல்லு. எப்படியானாலும் நான் உன்னை நம்பமாட்டேன். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொண்டு என்னை ஒதுக்கி வைக்கிறீர்கள். தனிமைப்படுத்துகிறீர்கள்.”

“நிகலாய்! உன் மனம் புண்பட்டிருக்கிறது” என்று அன்பும் இதமும் ததும்புச் சொல்லிக்கொண்டே அவனருகே சென்று உட்கார்ந்தான் ஹஹோல்.

‘என் மனம் புண்பட்டுத்தான் போயிருக்கிறது; உங்கள் மனமும் அப்படித்தான். ஆனால் உங்கள் வேதனை என் வேதனையைவிடக் கொஞ்சம் உயர்ந்த ரகம். அவ்வளவுதான்! நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் போக்கிரிகளாக நடந்துகொள்கிறோம். அவ்வளவுதான், நான் சொல்வேன், நீ இதற்கு என்ன சொல்லப் போகிறாய்? உம். சொல்வதைச் சொல்லு.”

அவன் அந்திரேயின் முகத்தைக் கூரிய கண்களால் பார்த்தான்; இறுக்க கடித்த பற்களோடு பதிலுக்காகக் காத்திருந்தான். அவனது சிவந்த முகத்தில் உணர்ச்சியின் உத்வேகம் மாறவில்லை; எனினும் தடித்த உதடுகள் மட்டும் நெருப்பால் சூடுபட்டதுபோல் நடுங்கின.

‘நான் எதுவுமே சொல்ல முடியாது’ என்று கூறிக்கொண்டே குரோதம் நிறைந்த நிகலாயின் பார்வைக்கு எதிராக தனது நீலநிறக் கண்களில் அன்பு நிறைந்த சிரிப்புக் குமிழிடப் பார்த்தான் ஹஹோல். ‘இதயத்தின் சகல புண்களும் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்கும் ஒருவனோடு எதை விவாதித்தாலும் வேதனைதான் அதிகரிக்கும், அது எனக்குத் தெரியும். தெரியும் தம்பி!”

“நீ என்னோடு விவாதிக்க முடியாது. எனக்கு எப்படியென்று தெரியாது’ என்று தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டே முனகினான் நிகலாய்.

“நாம் ஒவ்வொருவரும் தனித்தனி முள்ளடர்ந்த பாதையில்தான் நடந்து சென்றிருக்கிறோம். உன்னைப்போல ஒவ்வொருவருக்கும் துன்பம் எதிர்ப்பட்டிருக்கிறது....” என்றான் ஹஹோல்.