பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

191


"இல்லை” என்றான் மகன். அவனது கண்கள் நிலைகுத்தி நின்றன; அவனது குரலில் தெளிவு இருந்தது. “அவர்கள் அவனைச் சந்தேகிப்பதாய்த் தெரியவில்லை; அவன் இங்கு இல்லை. நேற்று மத்தியானம் அவன் ஆற்றுக்குப் போனான். போனவன் இன்னும் திரும்பவில்லை. நான் அவனைப் பற்றி விசாரித்தேன்....”

“எல்லாம் கடவுள் அருள்; அவன் அருள்!” என்று நிம்மதி நிறைந்து பெருமூச்செறிந்தாள் தாய்.

ஹஹோல் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.

“அங்கே அவன் கிடக்கிறான். என்ன நடந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வியந்து விழிப்பது போலக் கிடக்கிறான் என்று லேசாகப் பேசத் தொடங்கினான் தாய்: “அவலுக்காக யாருமே வருத்தப்படக் காணோம். யாருமே ஒரு நல்ல வார்த்தை சொல்லக் காணோம். அவன் அவ்வளவு சிறுமைப்பட்டுக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறான். என்னவோ ஒரு உடைந்து விழுந்த உதவாக்கரைச் சாமானைப் போல் நாதியற்றுக் கிடக்கிறான்.”

சாப்பாட்டு வேளையின்போது, பாவெல் திடீரெனத் தன் கையிலிருந்த கரண்டியை விட்டெறிந்துவிட்டுக் கத்தத் தொடங்கினான்.

“இது எனக்குப் புரியவே மாட்டேனென்கிறது!”

“எது?” என்று கேட்டான் ஹஹோல்.

“நாம் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்கிறோம். அதுவே மோசம். காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்க்கிறோம். அது சரிதான். அது எனக்குப் புரிகிறது. ஒரு மனிதன், தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப் போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நான் மிருகத்தைக் கொல்வதைப் போல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன். ஆனால் இவனை மாதிரி அனுதாபத்துக்குரிய ஒரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவதென்றால்? இவனை எப்படித்தான் ஒருவன் தாக்க நினைப்பான்?”

ஹஹோல் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.

“இவனும் ஒரு காட்டு மிருகத்தைப் போல மோசமானவன்தான்” என்றான் ஹஹோல். “நாம் கொசுவை எதற்காகக் கொல்கிறோம்?