பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

323


மனைவிக்கிடையே நிலவும் உறவு என்னவென்று அறியாத குழந்தைகள், கணவன் மனைவி விளையாட்டு விளையாடுவதைப் பார்ப்பது போலத் தான் அவள் அவர்களைப் பார்த்தாள். தன்னையுமறியாமலே அவள் அவர்களது பேச்சை பாவெல், அந்திரேய் முதலியோரது பேச்சுக்களோடு ஒப்பிட்டுப்பார்த்தாள். அந்த ஒப்பு நோக்கினால் இரண்டுக்கும் ஏதோ வித்தியாசம் இருப்பது போலத் தோன்றினாலும், அது என்ன என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை. சமயங்களில், தான் குடியிருந்த தொழிலாளர் குடியிருப்பிலுள்ள வீட்டில் பேசுவதைவிட, இவர்கள் ஒரேயடியாய் உரத்துக் கூச்சலிட்டுப் பேசுவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அதற்குத் தனக்குத் தானே விளக்கமும் கூறிக்கொண்டாள்.

“இவர்களுக்கு அதிக விஷயம் தெரியும்; எனவே அதிகமாகச் சத்தம் போட்டுப் பேசுகிறார்கள்; அவ்வளவுதான்.”

ஆனால் அடிக்கடி அவள் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த மனிதர்கள் வேண்டுமென்றே ஒருவரையொருவர் கிண்டிக் கிளறிவிட்டுப் பேசுவதாகவும், தங்களது ஆர்வத்தை வேண்டுமென்றே பெரிதாக வெளிக்காட்டிக் கொள்வதாகவும். ஒவ்வொருவனும் மற்றவனைவிட, நான்தான் உண்மையை நன்கு உணர்ந்து அதைச் சமீபத்துவிட்டதாக நிரூபிக்க முயல்வது போலவும், அப்படி ஒருவன் பேசும் போது, மற்றவர்கள் ஒவ்வொருவரும் தாம்தான் உண்மையை நெருங்கி, அதை தெளிவாக உணர்ந்துவிட்டதுபோல் காரசாரமாக, உத்வேகத்தோடு பேசிக்கொள்வது போலவும் தாய்க்குத் தோன்றியது. ஒவ்வொருவனும் அடுத்தவனைவிட ஒருபடி மேலே தாவிச் செல்ல விரும்புவது போல் அவள் மனத்தில் பட்டது; இந்த உணர்ச்சி அவளது மனத்தில் ஒரு சோகச் சலனத்தை ஏற்படுத்தியது. துடிதுடிக்கும் புருவங்களோடும் இரங்கிக் கேட்கும் கண்களோடும் அவர்களைப் பார்ப்பாள். பார்த்தவாறே தனக்குத் தானே நினைத்துக் கொள்வாள்;

“இவர்கள் அனைவரும் பாஷாவையும், அவனது தோழர்களையும் மறந்தே போய்விட்டார்கள்....”

அவர்களது விவாதங்கள் அவளுக்குப் புரியாவிட்டாலும் அவள் அவற்றைக் கவனமாகக் கேட்டாள். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சியைத்தான் அவள் உணர முயன்றாள். எது நல்லது என்பதைப் பற்றித் தொழிலாளர் குடியிருப்பில் பேச்செழுந்த காலங்களில் ஏதோ ஒரு முழு உருவம் போல் கருதி அனைவரும் அதை ஒப்புக்கொள்வார்கள்; ஆனால் இங்கு இவர்கள் அதைப் பற்றிப் பேசும்போதோ அந்த நல்ல தன்மை துண்டு பட்டுச் சிதறி, சிறுமையடைந்து போவதுபோல் அவளுக்குத் தோன்றியது. அங்கு