பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

மக்சீம் கார்க்கி


“நீ ஒன்றும் கவலைப்படாதே. அப்படி ஒன்றும் அதிகமிராது.”

தாய் வெளியே சென்றாள். கதவைத் தட்டினாள் பதிலில்லை. அந்த அமைதியில் அவள் இகோரைப் பற்றி நினைத்தாள்:

“அவன் செத்துக்கொண்டுதான் இருக்கிறான்....”

“யாரங்கே?” என்று அறைக்குள்ளிருந்து யாரோ கேட்டார்கள்.

“இகோர் இவானவிச்சிடமிருந்து வந்திருக்கிறேன்’. என்று அமைதியாகப் பதில் சொன்னாள் தாய். “அவன் உங்களை அவனது அறைக்கு வரச் சொன்னான்.”

“இதோ வருகிறேன்” என்று கதவையே திறக்காமல் உள்ளிருந்தவாறே பதில் சொன்னாள் அந்தப் பெண். தாய் ஒரு கணம் நின்றாள். பிறகு மீண்டும் கதவைத் தட்டினாள்: உடனே கதவு திறக்கப்பட்டது. ஒரு நெட்டையான மூக்குக் கண்ணாடியணிந்த ஸ்திரீ ஹாலுக்குள் வந்தாள். தனது உடுப்பிலுள்ள மடிப்புக்களை விரித்துத் தடவிவிட்டு விட்டு, வெடுக்கென்று தாயைப் பார்த்துக் கேட்டாள் அவன்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”,

“இகோர் இவானவிச் என்னை அனுப்பினான்.”

“சரி. புறப்படுங்கள். உங்களை நான் பார்த்திருக்கிறேனே” என்று அமைதியாகக் கூறினாள் அவள்; “சௌக்கியமா? இங்கே ஒரே இருட்டாகயிருக்கிறது.”

தாய் அவளைப் பார்த்தாள்; இதற்கு முன் அவளைச் சில தடவை நிகலாய் இவானவிச்சின் வீட்டில் பார்த்திருப்பதாக அவளுக்கு ஞாபகம் வந்தது.

“இவர்கள் எல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள்!” என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பெண் பெலகேயாவைத் தனக்கு முன்னால் போகச் சொன்னாள்.

“அவனுக்கு ரொம்ப மோசமாக இருக்கிறதா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம். அவன் படுத்திருக்கிறான். அவன் தின்பதற்கு ஏதாவது கொண்டு வரச்சொன்னான்.”

“அது ஒன்றும் அவசியமில்லை.”

அவர்கள் இகோரின் அறைக்குள் நுழைந்ததுமே அவனது கரகரத்த சுவாசம் அவர்கள் காதில் விழுந்தது: