பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

391


என்னவோ கோணங்கித்தனமாகத் தோன்றியது. மேலும் அவனது உதட்டில் பிறந்த உயிரற்ற புன்னகையால் அவனது முகமே கோரமாகத் தெரிந்தது. அவனது இடது கையில் ஒரு வாள் இருந்தது. வலது கையால் வீசி விளாசிச் சைகை காட்டிக்கொண்டே அவன் வந்தான். அவனது வருகையின் கனத்த காலடியோசையை எல்லோரும் கேட்டனர். கூட்டம் அவனுக்கு வழி விட்டு ஒதுங்கியது. அவர்களது முகங்களிலெல்லாம் ஒரு சோர்வு நிறைந்த அழுத்த உணர்ச்சி குடியேறியது. அவர்களது குரல்கள் எல்லாம் பூமிக்குள்ளே மூழகுவதுபோல் உள்வாங்கிச் செத்து மடிந்தன. தாய்க்கு தன் கண்கள் எரிந்து கனல்வதாகத் தோன்றியது. நெற்றித் தசை நடுங்கிச் சிலிர்த்தது. மீண்டும் அவளுக்கு அந்தக் கூட்டத்தாரோடு கலந்து கொள்ளும் ஆசை உந்தியெழுந்தது. அவள் முன்னே செல்வதற்காக முண்டிப் பார்த்தாள்; பிறகு அசைவற்று ஸ்திரமாக நின்று போனாள்.

“இதென்ன இது?” என்று ரீபினின் முன்னால் வந்து நின்று கொண்டே கேட்டான் அந்தத் தலைவன். ரீபினை ஏற இறங்க நோக்கி அளந்து பார்த்தான். “இவன் கைகளை ஏன் கட்டவில்லை? போலீஸ்! இவன் கையைக் கட்டுங்கள்”

அவனது குரல் உச்ச ஸ்தாயியில் கணீரென்று ஒலித்தது; என்றாலும் அதில் உணர்ச்சியில்லை.

“கட்டித்தான் இருந்தோம். ஜனங்கள் அவிழ்த்துவிட்டு விட்டார்கள்” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.

“என்ன ஜனங்களா? எந்த ஜனங்கள்?”

அந்தப் போவீஸ் தலைவன் தன்னைச் சுற்றிப் பிறை வடிவமாகச் சூழ்ந்து நிற்கும் ஜனக்கூட்டத்தைச் சுற்று முற்றும் பார்த்தான்.

“யார் இந்த ஜனங்கள்?” என்று அவனது உணர்ச்சியற்ற வெளிறிய குரலை உயர்த்தாமலும் தாழ்த்தாமலும் கேட்டான். அவன் வாளின் கைப்பிடியால் அந்த நீலக்கண் முஜீக்கைத் தொட்டான்.

“அந்த ஜனங்கள் யார்? நீயா சுமகோவ்? வேறு யார்? நீயா, மீஷன்?”

அவன் அவர்களில் ஒருவனது தாடியை வலது கையால் பற்றிப் பிடித்தான்.

“இங்கிருந்து உடளே கலைந்து போய்விடுங்கள்! அயோக்கியப் பயல்களா! இல்லையென்றால் உங்களுக்கு வேண்டு மட்டும் உதை கொடுத்தனுப்புவேன். நான் யாரென்பதைக் காட்டிவிடுவேன்!”

அவன் முகத்தில் கோபமோ பயமுறுத்தலோ காணப்படவில்லை. அவன் அமைதியாகப் பேசினான்: தனது நெடிய கரங்களால் ஜனங்களை