பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

409


“அவள் எல்லாவற்றையுமே நம்மிடம்தான் விட்டுச்செல்ல விரும்புகிறாள்” என்றான் ஸ்திபான்.

“அம்மா, அப்படியா? ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. நாங்கள் அதற்கு ஒரு சரியான இடம் பார்க்கிறோம்.”

அவன் ஒரு சிரிப்போடு தன்னிடத்தை விட்டுத் துள்ளியெழுந்து அங்கும் இங்கும் அவசர அவசரமாக உலாவினான்:

“சாதாரணமானதென்றாலும் இது ஓர் அபூர்வமான விஷயம். எனினும் ஒரு புறத்திலே தொடர்பு அற்றுப்போகும்போது, இன்னொரு புறத்திலே தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அது ரொம்பசரி. அந்தப் பத்திரிகை ரொம்ப நல்ல பத்திரிகை, அம்மா. அது நல்ல சேவை செய்கிறது. மக்களின் கண்களைத் திறக்கிறது. அதைப் பற்றிச் சீமான்கள் ஒன்றும் பிரமாதமாக எண்ணவில்லை. இங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சீமாட்டியிடம் தச்சு வேலை பார்த்து வருகிறேன். அவள் கண்ணியமானவள் தான். அவள் எனக்கு எத்தனையோ தடவை தன் புத்தகங்களைத் தந்து உதவியிருக்கிறாள். சமயத்தில் ஏதாவதொன்றைப் படிக்கும்போது திடீரென்று நமது அறியாமையை அது நீக்கிவிடுகிறது. பொதுவாகச் சொன்னால் அவளுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். ஒரு தடவை அவளிடம் நான் இந்தப் பத்திரிகையைக் கொண்டு கொடுத்தேன். உடனே அவளது மனம் புண்பட்டுப்போயிற்று. ‘பியோத்தர்’ இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் படிக்காதே. ஏதோ சில உதவாக்கரை பள்ளிக்கூடத்துப் பையன்கள்தான் இப்படி எழுதித் தள்ளுகிறார்கள். இதைப் படிப்பதால் உனக்குத் தொல்லைகள்தான் மிஞ்சும். சைபீரியாவுக்கோ, சிறைக்கோ உன்னை இவை அனுப்பிவைத்துவிடும்!” என்றாள் அவள்......”

மீண்டும் அவன் ஒரு கண நேரம் மௌனமாயிருந்தான். பிறகு கேட்டான்:

“அம்மா, அந்த அடிபட்ட மனிதன் இருக்கிறானே—அவன் உங்கள் சொந்தக்காரனா?”

“இல்லை” என்றாள் தாய்.

பியோத்தர் சத்தமின்றி சிரித்தான். எதையோ கேட்டுத் திருப்தியுற்றவன் போல, தலையை அசைத்துக்கொண்டான். ஆனால் மறு நிமிஷத்திலேயே ரீபினுக்கும் தனக்கும் சொந்தமில்லை என்று கூறிய வார்த்தையால், ரீபினையே புண்படுத்திவிட்டதாகத் தாய் உணர்ந்துகொண்டாள். எனவே உடனே சொன்னாள்: