பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

மக்சீம் கார்க்கி


தாய் அசையாமல் படுத்தவாறே இருளின் கனவுக் குரலை கேட்டுக்கொண்டுகிடந்தாள். அப்போது அவளது கண் முன்னால் ரத்தம் தோய்ந்த ரீபினின் முகம் நிழலாடித் தெரிந்தது.

மேலே பரணில் உசும்பும் சத்தம் கேட்டது.

“இந்த மாதிரி வேலையில் எப்படிப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள், பார்த்தாயா? வாழ்க்கை முழுவதும் சோகத்தையே அனுபவித்து அனுபவித்து உழைத்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வயசிலே இவர்கள் ஓய்வெடுக்க வேண்டியதுதான் நியாயம். அனால் அதற்குப் பதிலாக இந்த மாதிரிக் காரியங்களில் ஈடுபட்டு வேலை செய்கிறார்கள், நீயும் இளமையாகவும் துடிப்பாகவும்தான் இருக்கிறாய்..... இருந்தும் என்ன, ஸ்திபான்.....”

அந்த முஜீக்கின் பதில் ஆழ்ந்த செழுமையான குரலில் ஒலித்தது:

“இறங்குவதற்கு முன்னால் முதலில் யோசிக்க வேண்டாமா?”

“இந்த மாதிரி நீ முன்னாலேயே சொல்லியிருக்கிறாய்.”

இருவர் குரலும் ஒரு நிமிஷ நேரம் நின்று போயின. பிறகு ஸ்திபானின் குரல் ஒலித்தது.

“இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். முதலில் முஜீக்குகளிடம் தனித்தனியாகப் பேச வேண்டும். உதாரணமாக, அலெக்சி மாகவிடம் பேசத்தொடங்குவோம். அவன் படித்தவன்; உணர்ச்சி நிறைந்தவன்; அதிகாரிகளால் துன்பத்துக்கு ஆளானவன். செர்கேய்ஷோரின் அவனும் ஒரு புத்திசாலியான முஜீக்தான், கினியாசெவ் நேர்மையானவன்; பயப்படமாட்டான். ஆரம்பத்திலே இவர்கள் போதும். அவள் நமக்குச் சொன்னாளே, அந்த மாதிரி மக்களை நாமும் பார்க்கத்தான் வேண்டும். நான் ஒரு கோடரியைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, விறகு பிளந்து கொடுத்துக் கொஞ்சம் மேல் வரும்படி சம்பாதிக்கப் போகிறவன் மாதிரி நகருக்குப் போய் வருகிறேன். நாம் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஒரு மனிதனின் மதிப்பு அவன் செய்யும் வேலையில் இருக்கிறது என்று அவள் சொன்னாளே, அது ரொம்ப சரி. இன்று அந்த முஜீக் நடந்துகொண்டானே, அந்த மாதிரி. கடவுளின் முன்னால்கூட அவனைக் கொண்டுவந்து நிறுத்திப் பாரேன். அவன் தன் பிடியிலிருந்து கொஞ்சம்கூடத் தவறமாட்டான். சரி. நீ அந்த நிகீதாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? மனச்சாட்சிக்கு ஆட்பட்டவன். இல்லையா? சரி.”

“உங்கள் கண் முன்னாலேயே அவர்கள் ஒரு மனிதனை அடித்து நொறுக்குகிறார்கள், நீங்களானால் வாயைப் பிளந்து கொண்டு வெறுமனே வேடிக்கை பார்க்கிறீர்கள்.”