பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

427


தன்னுடைய சொந்த முயற்சிகளால்தான் பெற்ற வெற்றியை அவள் மீண்டும் நினைவுகூர்ந்தபோது, அவளது உள்ளம் ஆனந்த வெறியால் அமைதியாகப் படபடத்தது; அந்த ஆனந்தத்தை அவள் நாணிக் கோணி உள்ளடக்கிக்கொண்டாள்.

19

நிகலாய் இவானவிச் அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான், அவனது தலை கலைந்து போயிருந்தது; கையில் ஒரு புத்தகம் இருந்தது.

“அதற்குள்ளாகவா?” என்று உற்சாகமாகக் கூறினான் அவன். “நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான பேர்வழிதான்!”

அன்பு ததும்பும் கண்கள் அவனது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே படபடவென்று இமை தட்டி விழித்தன. அவளது மேல் கோட்டைக் கழற்றுவதற்கு அவளுக்கு உதவினான்; அன்பு நிறைந்த புன்னகையோடு அவளது முகத்தைப் பார்த்தான்.

“நேற்றிரவு நம் வீட்டைச் சோதனை போட்டார்கள்” என்றான் அவன். “அதைக் கண்டு, போன இடத்தில் உங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நான் பயந்துபோனேன். ஆனால் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை. உங்களைக் கைது செய்திருந்தால், என்னையும் அவர்கள் நிச்சயம் கொண்டு போயிருப்பார்கள்.”

அவளைச் சாப்பாட்டு அறைக்குள் அழைத்துச் சென்றான். போகும்போதே ஒரே உற்சாகத்தோடு பேசிக்கொண்டே போனான்.

“என் வேலை போய்விடும். அது நிச்சயம்தான். ஆனால், அது என்னைக் கொஞ்சம்கூடப் பாதிக்கவில்லை. மேஜையடியிலே உட்கார்ந்து, குதிரைகள் வைத்திராத விவசாயிகளைக் கணக்கு எடுத்து எடுத்து எனக்கே எரிச்சலாய்ப் போய்விட்டது.”

யாரோ ஒரு ராட்சதன் திடும் வெறியோடு வெளியிலிருந்து சுவர்களை உலுக்கி வீட்டிலுள்ள சாமான்களையும் உருட்டித் தள்ளிய மாதிரி. அந்த அறையே ஒரே அலங்கோலமாய்க் கிடப்பதைத் தாய் கண்டாள். படங்கள் எல்லாம் தரைமீது இறைந்துகிடந்தன. சுவரில் ஒட்டியிருந்த காகிதங்களெல்லாம் கிழிபட்டு, துண்டு துண்டாக நடாக்களைப்போல் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு புறத்தில் தரையில் பதிந்திருந்த பலகை அகற்றப்பட்டுக்கிடந்தது. ஒரு கண்ணாடிச் சட்டம் தகர்த்தப்பட்டிருந்தது. அடுப்புக் கரியும் சாம்பலும் தரையில் பரவிக்கிடந்தன, தனக்கு ஏற்கெனவே பழகிப்போன இந்தக் காட்சியைக்