பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

மக்சீம் கார்க்கி


"ஆமாம்.”

அவள் கொண்டிருந்த உணர்ச்சிப் பரவசம் திடீரென இற்று முறிந்து, அவளுக்குக் களைப்புணர்ச்சியினால் ஏற்படும் மயக்க உணர்ச்சி மேலோங்கியது. அவளது புருவங்கள் நடுங்கின. நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்துத் துளிர்த்தன. அவளது இதயத்திலே துயரமும் அதிருப்தியும் நிறைந்த மனப்பாரம் ஏறியமர்ந்தது; அந்த மனப்பார உணர்ச்சி திடீரென்று அவள் மனதில் நீதி மன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கசப்புணர்ச்சியை உண்டாக்கிவிட்டது. தலையை வலிப்பதாக உணர்ந்தாள் அவள். எனவே தன் கையினால் நெற்றியை அழுத்திப் பிடித்துத் தேய்த்தவாறே அவள் நிமிர்ந்து பார்த்தாள். கைதிக் கூண்டுகளை நெருங்கிச் சென்ற கைதிகளின் உறவினர்களையும் பேச்சுக் குரலின் ரீங்காரம் நிரம்பிய நீதி மன்றத்தையும் அவள் பார்த்தாள். அவளும் பாவெலிடம் சென்றாள். அவன் கையை அழுத்திப் பிடித்தாள். பல்வகையுணர்ச்சிகளின் குழப்ப நிலைக்கு ஆளாகி, அதனால் எழுந்த வேதனையோடும் இன்பத்தோடும் அவள் பொங்கிப் பொங்கி அழுதாள். பாவெல் அவளிடம் அன்போடு பேசினான்; ஹஹோலோ சிரித்துக் கேலி பண்ணினான்.

எல்லாப் பெண்களுமே அழுதார்கள். சோகத்தால் அழுவதைவிட, பழக்கத்தின் காரணமாகத்தான் அவர்கள் அழுது தீர்த்தார்கள். எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ வந்து தம்மைத் தாக்கிய சோக வேதனை எதுவும் அவர்களுக்கு இல்லை. தங்களது குழந்தைகளைப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தால்தான் அவர்கள் அழுதார்கள். அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து அந்த வருத்த உணர்ச்சிகூட ஓரளவு சமனப்பட்டுப் போயிருந்தது. தந்தைமார்களும் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைக் குழம்பிப்போன பல்வகை உணர்ச்சியோடு பார்த்தார்கள். பெரியவர்களாகிய நாங்கள் அந்த இளைஞர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற வழக்கமான எண்ணத்தோடு, அந்த இளைஞர்களின் காரியங்களில் அவநம்பிக்கை உணர்ச்சியோடுதான் அவர்கள் பார்த்தார்கள். எனினும் அவர்கள் அந்த இளைஞர்களுக்கு ஒருவிதத்தில் மரியாதையும் காட்டினார்கள். புதியதொரு நல்வாழ்வைச் சமைப்பதைப்பற்றிக் கொஞ்சங் கூடப் பயமில்லாமலும் தைரியத்தோடும் அந்த இளைஞர்கள் எடுத்துக்கூறிய விஷயம் அவர்களது மனத்திலோ ஒரு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே அந்த வியப்புணர்ச்சிக்கு ஆளாகி, இனிமேல் தாம் எந்த விதமாக வாழ வேண்டும் என்ற கவலைக்கு ஆளாகிச் சிந்தித்துச் சிந்தித்துச் சோர்ந்தார்கள் அந்தப் பெற்றோர்கள்.