பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

519


பாவெலது பேச்சை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விநியோகிக்க, தன் மகனது சொற்களை உலகமெங்கும் பரப்ப, அவள் பேராவல் கொண்டு தவித்தாள். எனவே கொஞ்சுவதுபோல அந்த டாக்டரின் முகத்தை பார்த்தாள். அவனது பதிலுக்காகக் காத்து நின்றாள்.

“நீங்கள் இந்த வேலையை இப்போது மேற்கொள்ளத்தான் வேண்டுமா என்பது சைத்தானுக்குத்தான் தெரியும்” என்று தயங்கிக்கொண்டே கூறிவிட்டு, அவன் தன் கடிகாரத்தை எடுத்தான். “இப்போது மணி பதினொன்று நாற்பத்தி மூன்று. இரண்டு மணி ஐந்து நிமிஷத்துக்குப் புறப்பட்டு ஐந்தே கால் மணிக்குப் போய் சேருவதற்கு ஒரு ரயில் இருக்கிறது. மாலைவேளைதான். இருந்தாலும் அப்படியொன்றும் காலதாமதமில்லை. ஆனால் இப்போது அது பிரச்சினையல்ல......”

“அது பிரச்சினையில்லை” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அதையே திரும்பக் கூறினாள் லுத்மீலா.

“எதுதான் பிரச்சினை?” என்று கேட்டுக்கொண்டே அவன் பக்கமாகச் சென்றாள் தாய். “காரியம் வெற்றியோடு முடியவேண்டும். அவ்வளவுதானே......”

லுத்மீலா அவளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே நெற்றியைத் துடைத்துவிட்டுக்கொண்டாள்.

“இந்தக் காரியத்தை மேற்கொள்ளுவது ஆபத்தானது.”

“ஏன்?” என்று அழுத்தத்தோடு கேட்டாள் தாய்.

“அதனால்தான்” என்று படபடவென்று பேசத் தொடங்கினான் அந்த டாக்டர். ‘நிகலாய் கைதாவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கிறீர்கள், தொழிற்சாலைக்கும் போய் வந்திருக்கிறீர்கள். எனவே அந்த ஆசிரியையின் அத்தை என்று எல்லோரும் உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அந்தச் சட்ட விரோதமான் பிரசுரங்கள் தொழிற்சாலையில் தலைகாட்டிவிட்டன. இதையெல்லாம் வைத்து ஜோடித்தால், உங்கள் கழுத்தில் சரியான சுருக்கு வந்து விழுந்துவிடும்.”

“என்னை அங்கு எவரும் கண்டுகொள்ள முடியாது!” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினாள் தாய். “தான் திரும்பி வரும்போது அவர்கள் ஒருவேளை என்னைக் கைது செய்து ‘எங்கு போய்விட்டு வருகிறாய்?’ என்று கேட்டாலும்...”

அவள் ஒரு கணம் தயங்கினாள். பிறகு சத்தமிட்டுச் சொன்னாள்:

“என்ன சொல்வேன் என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்து நேராக நான் தொழிலாளர் குடியிருப்புக்குச் செல்வேன். அங்கு எனக்கு