பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

49


"ஆமாம், அனைவருக்காகவும், அனைவருக்காகவும், அம்மா! அனைவருக்கும்தான்!” என்றான் ஹஹோல், எங்களுக்குக் குலம் கோத்திரமோ, தேசீய இன பேதங்களோ தெரியாது. தோழர்களைத் தெரியும்; எதிரிகளையும் தெரியும். சகல தொழிலாளி மக்களும் எங்களுக்குத் தோழர்கள்: சகல பணக்காரர்களும், சகல அரசுகளும் எங்களுக்கு எதிரிகள். உலகத்தை நீங்கள் ஒரு முறை பார்த்து, உலகில் எத்தனை கோடி தொழிலாளி மக்கள் இருக்கிறார்கள்,” அவர்கள் எவ்வளவு பலசாலிகளாயிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், உங்கள் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது: உங்கள் இதயத்தின் கொண்டாட்டத்துக்கு எல்லையே இருக்காது! அம்மா, பிரெஞ்சுக்காரனும், ஜெர்மானியனும், இத்தாலியனும் நாம் எப்படி வாழ்க்கையைப் பார்க்கிறோமோ அதுபோலவே பார்க்கிறான். நாம் அனைவரும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள்! அகில உலகத் தொழிலாளர்களின் வெல்லற்கரிய சகோதரத்துவம் எனும் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்! இந்த எண்ணம் நமது இதயங்களைப் பூரிக்கச் செய்கிறது. இதுதான் நியாயம் என்னும் சொர்க்க மண்டலத்தின் சூரியனாய்ச் சுடர்விடுகிறது. தொழிலாளியின் இதய பீடம்தான் அந்தச் சொர்க்க மண்டலம்! யாராயிருந்தாலும் சரி, எந்த இனத்தவனாயிருந்தாலும் சரி, ஒரு சோஷலிஸ்ட் எக்காலத்திலும் நமக்கு உண்மை உடன் பிறப்பு — நேற்று இன்று என்றுமேதான்.”

இந்தச் சிறு பிள்ளைத்தனமான, எனினும் உறுதி வாய்ந்த நம்பிக்கையே அவர்களிடம் நாளுக்கு நாள் உரம் பெற்று வந்தது; நாளுக்கு நாள் விம்மி வளர்ந்து, ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்து வந்தது. இதைக் கண்ட தாய், வானத்தில் தான் காணும் கதிரவனைப் போல. மகத்தான ஏதோ ஒன்று இவ்வுலகத்தில் பிறந்துவிட்டது என்று, தன்னையறியாமலே உணரத் தலைப்பட்டாள்.

அவர்கள் அடிக்கடி பாட்டுப்பாடினார்கள், உரத்த உற்சாகம் நிறைந்த குரலில் அநேகமாக எல்லாருக்குமே தெரிந்த வெகு சாதாரணமான பாடல்களைப் பாடினார்கள்; சமயங்களில் அவர்கள் புதிய பாடல்களை, கருத்தாழம் கொண்ட பாடல்களைப் பாடினார்கள். இனிமையான இங்கிதத்தோடும், அசாதாரணப் கீதசுகத்தோடும் பாடினார்கள். இந்தப் பாடல்களை அவர்கள் உரக்கப் பாடுவதில்லை, தேவாலய சங்கீதத்தைப் போலத் தாழ்ந்த குரலில் பாடினார்கள். அந்தப் பாடல்களைப் பாடும்போது, அவர்களது முகங்கள் கன்றிச் சிவக்கும்; வெளிறிட்டு வெளுக்கும், கணீரென ஒலிக்கும் அந்த மணி வார்த்தைகளில் ஒரு மகா சக்தி பிரதிபலிக்கும்.