2
தாழ்வு மனப்பான்மை
கொள்ள வேண்டாம்" என்று கொஞ்சம் குத்தலாகவும் வருத்தத்தோடும் அவன் சொன்னான்.
"அடே, அப்படியொன்றும் இல்லையடா- தாழ்வு மனப்பான்மையைப் பற்றி உன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்" என்று சமாதானப்படுத்தும் முறையில் பேசினேன்.
"உலகத்திலே இன்றைக்கு இந்தத் தாழ்வு மனப்பான்மைதான் எங்கு பார்த்தாலும் தாண்டவமாடுகிறது. தாழ்வு மனப்பான்மையின் காரணமாகத்தான் எத்தனையோ விபரீதங்கள் நடக்கின்றன" என்று என் நண்பன் பெரிய பிரசங்கத்தையே ஆரம்பித்துவிட்டான்.
தாழ்வு மனப்பான்மை, மனக்கோட்டம், தாழ்வு மனக்கோட்டம், சிக்கல் என்றிப்படியெல்லாம் பேசுவது இன்று சாதாரணப் பழக்கமாகிவிட்டது. எல்லா இடங்களிலுமல்ல; நவீனப் படிப்பும், நாகரிக வாழ்க்கையும் மிகுந்துள்ள சமூகங்களிலே இது பழக்கமாகிவிட்டது. மேல் நாடுகளிலே மிக அதிகம்; நம் நாட்டில் இது மெதுவாகத் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.
பத்திரிகை விளம்பரங்களும், புதிய உளவியலை அடிப்படையாகக் கொண்ட கதைகளும், சினிமாப் படங்களும்இந்தப் பழக்கத்தை ஓங்கச் செய்வதில் உதவியாக நிற்கின்றன.
தாழ்வு மனப்பான்மை என்ன என்று தெளிவாகத் தெரிந்துகொள்ளாமலே இப்பொழுது பலர் அதைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். தாழ்வு மனப்பான்மைதான் காரணம் என்று எதற்கெடுத்தாலும் காரணம் கற்பிக்கவும் தொடங்குகிறார்கள். அது நவீன நாகரிகத்தின் அறிகுறியாகவும் இடம்பெற முயல்கிறது.